தகுதியற்றோர்க்கு வீடு, மானியம்: வீவக குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய ஏஜிஓ அறிக்கை

தகுதியற்றோர்க்கு வீடு, மானியம்: வீவக குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய ஏஜிஓ அறிக்கை

2 mins read
9fcfe600-ac9e-4ee5-9911-87f09b1cd0da
திருமணமான பிள்ளைகளுக்கான முன்னுரிமைத் திட்டம், நெருக்கம் ஊக்குவிக்கும் வீட்டு மானியத் திட்டம் ஆகியவற்றின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 37,737 விண்ணப்பங்களை தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் ஆய்வு செய்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் (ஏஜிஓ) வெளியிட்டிருக்கும் வருடாந்திர அறிக்கையில், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் நடைமுறைகளிலேயே அதிகக் குறைபாடுகள் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதியற்றோருக்கு வீடமைப்பு மானியம் அளிக்கப்பட்டதும் அவற்றுள் அடங்கும்.

அதேபோல, மேற்கொள்ளப்படாத கண்காணிப்பு மற்றும் அமலாக்கப் பணிக்காகக் குத்தகையாளர் ஒருவருக்கு வீவக $9.7 மில்லியன் அதிகமாக அளித்ததற்கான சாத்தியம் இருப்பதை அறிக்கை கூறியது.

மாதாந்தர கார்நிறுத்த அனுமதிக்கான விண்ணப்பங்களைப் பரிசீலித்ததிலும் அந்த அனுமதியைப் புதுப்பித்ததிலும் நிகழ்ந்த குறைபாடுகளும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

கார்நிறுத்த அனுமதிக்கான விண்ணப்பதாரரோ அல்லது அவர் சந்திக்கச் சென்றதாகக் கூறப்பட்ட குடும்ப உறுப்பினரோ ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், பெறப்பட்ட $2.95 மில்லியன் தொகையும் அதில் அடங்கும்.

தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் புதன்கிழமை (ஜூலை 15) வெளியிட்ட ஆண்டறிக்கை, ஜூலை 2ஆம் தேதி அதிபர் தர்மன் சண்முரத்னத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு, ஜூலை 14ஆம் தேதி நாடாளுமன்றத்திடம் தாக்கல் செய்யப்பட்டது.

அமைச்சுகள் மற்றும் அரசாங்க அமைப்புகளின் முக்கியக் குறைபாடுகளை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

திருமணமான பிள்ளைகளுக்கான முன்னுரிமைத் திட்டம், நெருக்கம் ஊக்குவிக்கும் வீட்டு மானியத் திட்டம், மசே நிதி வீட்டு மானியத் திட்டம் ஆகிய மூன்று திட்டங்களுக்கான விண்ணப்பதாரர்களின் தகுதியை வீவக சரிபார்த்த விதத்தில் குறைபாடுகள் இருந்ததையும் அறிக்கை சுட்டியது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அதன் விளைவாக, தகுதியற்ற விண்ணப்பதாரர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு அதற்கான மானியங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறியது.

மணமான பிள்ளைகளுக்கான முன்னுரிமைத் திட்டம், நெருக்கம் ஊக்குவிக்கும் வீட்டு மானியத் திட்டம் ஆகியவற்றின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட 37,737 விண்ணப்பங்களை தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் ஆய்வு செய்தது.

அந்தத் திட்டங்களுக்கான தகுதியை மதிப்பிட, ஏற்கெனவே தன்வசம் உள்ள வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் தகவல்களையும் விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்களையும் வீவக பயன்படுத்தி வருவதாக அது தெரிவித்தது.

ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் வீவகவுக்குத் தெரியாமலே தங்கள் குடியிருப்பு முகவரியை மாற்றியிருக்கக்கூடும் என்பதால், அத்தகைய தகவல்கள் புதுப்பிக்கப்படாதவையாக இருக்கலாம் என்று அறிக்கை சுட்டியது.

அந்த வகையில், மணமான பிள்ளைகளுக்கான முன்னுரிமைத் திட்டத்தின் 37 விண்ணப்பங்களும் நெருக்கம் ஊக்குவிக்கும் வீட்டு மானியத் திட்டத்தின் 27 விண்ணப்பங்களும் அவற்றுக்குத் தேவையான அளவுகோலைப் பூர்த்தி செய்யவில்லை என்று அலுவலகம் கண்டறிந்தது. அந்த விண்ணப்பங்கள் $0.47 மில்லியன் மானியங்கள் தொடர்பானவை.

குறிப்புச் சொற்கள்