பொதுத் தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சாதனங்களை மறுபயனீடு செய்தும் விற்பனை செய்தும் விரயத்தைக் குறைத்து உள்ளதாக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பலரும் வேட்பாளர்கள் சிலரும் தெரிவித்து உள்ளனர்.
விளம்பரப் பதாகை போன்ற பொருள்களை விற்பனை செய்தோர் பிரசாரச் செலவை ஈடுகட்டவும் அறப்பணிகளுக்கு நன்கொடை திரட்டவும் அவ்வாறு செய்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்தனர்.
மே 3ஆம் தேதி நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் செலவழித்த சராசரி தொகை $25,285 என்று மே 28ஆம் தேதி தேர்தல் துறை வெளியிட்ட முன்னோடி மதிப்பீடு குறிப்பிட்டது.
அந்தத் தேதி வரை தேர்தல் துறையிடம் செலவு கணக்கைச் சமர்ப்பித்த 35 வேட்பாளர்களில், மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியின் மக்கள் செயல் கட்சி (மசெக) வேட்பாளர்களே ஆக அதிகமாகச் செலவழித்ததாக ஆவணங்கள் தெரிவித்தன.
அந்த குழுத்தொகுதி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வுபெற்றனர். 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு போட்டியின்றி வென்ற முதல் வேட்பாளர்கள் அவர்கள்.
இணையம் அல்லாத தேர்தல் விளம்பரங்களுக்கே அந்த வேட்பாளர்கள் அதிகம் செலவழித்தனர். அந்த விளம்பரங்களுக்கு மட்டும் $388,765 செலவிடப்பட்டது. வேட்பாளர்களின் மொத்த செலவுகளில் அது ஏறத்தாழ 60 விழுக்காடு.
இணையம் அல்லாத தேர்தல் விளம்பரங்களின்கீழ் கொடிகள், சுவரொட்டிகள், பதாகைகள் போன்றவை அடங்கும் என்று தேர்தல் துறைத் தரவுகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் நேரத்தில் வழக்கமாக அத்தகைய பொருள்களுக்கே அதிகம் செலவிடப்படும்.
தொடர்புடைய செய்திகள்
தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பின்னர் எஞ்சிய பிரசார சாதனங்கள் அல்லது பொருள்கள் எவ்வளவு என்பது குறித்த அதிகாரத்துவ எண்ணிக்கை எதுவும் இல்லை.
மக்கள் செயல் கட்சியின் எஞ்சிய பிரசார சாதனங்கள், மறுசுழற்சிக்கு உரியவை, மறுசுழற்சிக்கு உட்படாதவை என்று பிரிக்கப்பட்டு, முறையாக அப்புறப்படுத்தப்பட்டதாக அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்.
“எங்கள் கட்சியின் பிரசார சாதனங்கள் எதுவும் விற்பனைக்கோ ஏலத்திற்கோ விடப்படவில்லை,” என்றார் அந்தப் பெண்மணி.
அதேநேரம், பிரசாரப் பொருள்கள் சிலவற்றை விற்பனை செய்ததாக சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் டெஸ்மண்ட் லிம் கூறியுள்ளார்.
இந்தப் பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட சாலையோர சுவரொட்டிகளை விற்றதன் மூலம் கிடைத்த $8,000 தொகையுடன் திரு லிம் தமது சொந்தப் பணம் $8,000 தொகையையும் சேர்த்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிப் பிள்ளைகளின் கைச்செலவு நிதிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது.