ஓங் பெங் செங் தொடர்புடைய நிறுவனங்களுக்கு $24.6 மி. வழங்கிய ‘எச்பிஎல்’

1 mins read
4b8dc0c3-e61b-4208-babb-ecd7352caa05
‘எச்பிஎல்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் இணை நிறுவனருமான ஓங் பெங் செங் ஊழல் தொடர்பான விசாரணையை எதிர்நோக்குகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹோட்டல் புரோப்பர்ட்டிஸ் லிமிடெட் (எச்பிஎல்) நிறுவனம், ஊழல் தொடர்பான விசாரணையை எதிர்நோக்கும் அதன் நிர்வாக இயக்குநர் ஓங் பெங் செங் பங்குகொண்டுள்ளதாகக் கருதப்படும் இரு நிறுவனங்களிடம் முன்பணமாக $24.6 மில்லியனை வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பணம் இன்னும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை.

அந்தத் தொகையில் $18.2 மில்லியன், ‘கிரேட் வெஸ்டர்ன் என்டர்பிரைசஸ்’ நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டது. அதில் திரு ஓங்கும் நிர்வாகக் குழு உறுப்பினர் டேவிட் ஃபூவும் ஆளுக்கு 15 விழுக்காட்டு அனுகூலங்களைப் பெற உரிமை உள்ளது.

ஏறக்குறைய $6.4 மில்லியன் எச்பிஎல் டோலோமைட்ஸ் (யுகே) நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டது. அதில் அனுகூலங்களைப் பெற திரு ஓங்கிற்கு 20 விழுக்காட்டு உரிமை உள்ளது.

சிங்கப்பூர் பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பு (எஸ்ஜிஎக்ஸ்ரெக்கோ), எச்பிஎல் நிறுவனத்திடம் அதன் வெவ்வேறு பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்களைக் கேட்டபோது அந்தத் தொகைகள் குறித்த தகவல்கள் வெளியாயின.

பங்காளிகளிடமிருந்தும் கூட்டாக நடத்தப்படும் நிறுவனங்களிடமிருந்தும் பெறவேண்டிய தொகைகளில் உயர்வு இருந்ததால் அதன் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி அந்தத் தொகை $56.5 மில்லியனாக இருந்தது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அது $49.1 மில்லியனாக இருந்தது.

இதற்கிடையே, புதன்கிழமை காலை 9.21 மணி நிலவரப்படி, எச்பிஎல் நிறுவனத்தின் பங்குவிலை எந்த மாற்றமுமின்றி, $3.50 எனும் நிலையிலேயே இருந்தது.

குறிப்புச் சொற்கள்