எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் முதலீட்டின் மூலம் சிங்கப்பூர் வர்த்தக நிறுவனங்கள் பலனடையும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் முன்வந்து உள்ளது.
அந்த நோக்கத்தில், புதிய பொது-தனியார் பங்காளித்துவ அமைப்பு ஒன்றை சம்மேளனம் ஏற்படுத்தி வருகிறது.
உள்ளூர் நிறுவனங்களுக்கும் அவற்றின் வட்டார நிறுவனங்களுக்கும் இடையிலான வர்த்தகத்தையும் முதலீட்டையும் ஊக்குவிக்க அந்த முயற்சியை அது எடுத்து வருகிறது.
‘வருங்கால வர்த்தக, முதலீட்டுக்கான மையம்’ என்னும் அந்த அமைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடுகள் மூலம் கிடைக்கும் பலன்களை கூட்டும் வகையில் சிங்கப்பூர் மற்றும் வட்டார வர்த்தகங்களின் திறனை வளர்க்கும்.
இந்த விவரத்தை சம்மேளனத்தின் துணைத் தலைவர் ஆண்ட்ரு குவான், சிங்கப்பூர் ஏபெக்ஸ் வர்த்தக உச்சநிலைக் கூட்டத்தில் வியாழக்கிழமை (ஜூலை 25) தெரிவித்தார்.
சம்மேளனம் உருவாக்கி உள்ள மையத்துக்கு வர்த்தக, தொழில் அமைச்சு, எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு போன்றவற்றோடு வர்த்தக நிறுவனங்களும் ஒரேமாதிரியான எண்ணம் கொண்ட பங்காளித்துவ அமைப்புகளும் ஆதரவு வழங்கும் என்றார் அவர்.
வர்த்தகம் மற்றும் முதலீட்டில் ஈடுபட்டு உள்ளோர், சிந்தனைமிக்க தலைவர்கள், உலக வர்த்தகத்தை நவீனமயமாக்க இணைந்து பணியாற்றும் அரசாங்க அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய வட்டார சமூகம் ஒன்றை ஏற்படுத்த புதிய அமைப்பு குறிக்கோள் கொண்டுள்ளதாக சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
இதற்கிடையே, “உலக வர்த்தகச் சூழலில் சிக்கல்கள் மிகுந்து வரும் நிலையில், தன்னிடம் உள்ள வர்த்தகத் திறன்களையும் ஆற்றல்களையும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்க இங்குள்ள வர்த்தகச் சமூகம் கொண்டிருக்கும் தணியாத ஆசையை புதிய மையம் பிரதிபலிக்கிறது,” என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியிருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசினார்.
அப்போது குறிப்பிட்ட திரு டான், “வர்த்தகம் மற்றும் உலகமயமாதலின் அடுத்த கட்டம் கணிசமான இடையூறுகளையும் தொடர்ச்சியற்ற போக்கையும் சந்திக்கும் நிலை உள்ளதால் சம்மேளனம் தொடங்கிய மையம் போன்ற முயற்சிகள் தவிர்க்க முடியாதவை,” என்றார்.

