இன நல்லிணக்க நாள் கொண்டாட்டங்களின்போது பொருத்தமற்ற வகையில் உடையணிந்து வந்த இரண்டு மாணவர்கள் மீது ராஃபிள்ஸ் கல்வி நிலையம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உள்ளது.
அவர்கள் அன்றைய நாளில் அணிந்திருந்த உடையைக் காட்டும் படம் ஒன்று இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்த கல்வி நிலையம், அவர்களுக்கு புத்திமதியும் வழங்கி உள்ளது.
ஒன்றாக நின்றிருந்த இரு மாணவர்களில் ஒருவர் கறுப்பு மேல் சட்டையும் வெள்ளை நிற கால்சட்டையும் அணிந்திருந்தார். பக்கத்தில் நின்றிருந்தவர் மீது அவர் தனது கையைப் போட்டிருந்தார்.
இரண்டாமவர் கறுப்பாக்கப்பட்ட முகத்துடன் காணப்பட்டார். உணவு விநியோக நிறுவனம் ஒன்றின் முழுக்கை டி-சட்டையையும் வெள்ளை நிற கால்சட்டையையும் அவர் அணிந்திருந்ததை அந்தப் படம் காட்டியது.
இது தொடர்பாக விளக்கம் அளித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய தலைமை ஆசிரியர் ஆரோன் லோ, சம்பந்தப்பட்ட இரு மாணவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினார். ஆயினும், எந்த மாதிரியான நடவடிக்கை என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
மற்றவர்களின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும் என்றும் கவனத்துடன் செயல்படுமாறும் அந்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஆண்டுதோறும் ஜூலை 21ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் இன நல்லிணக்க நாளில் அவரவர் தங்களது பாரம்பரிய உடை அணிந்து வரவேண்டும் என்று மாணவர்களிடம் தமது கல்வி நிலையம் கூறியிருப்பதாகவும் தலைமை ஆசிரியர் குறிப்பிட்டார்.