ஹைட்ரஜன் வேதித்தனிம ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தை அளவிட்டு, வர்த்தகமயமாக்க, அவற்றை நேரடி செயல்முறைக்கு மாற்ற உதவும் புதிய ஆய்வு மையத்தை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் தொடங்கி உள்ளது.
சிங்கப்பூர் தனது கரிமநீக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக குறைந்த அளவுள்ள ஹைட்ரஜனைப் பயன்படுத்த முயன்று வரும் வேளையில் அந்த ஆய்வு மையம் திறக்கப்பட்டு உள்ளது.
குறைந்த கரிமம் உடைய ஹைட்ரஜனை 2050ம் ஆண்டுக்குள் தனது எரிசக்தித் தேவையில் 50 விழுக்காடு பயன்பாட்டில் வைக்கும் சாத்தியத்தை சிங்கப்பூர் ஆராய்கிறது.
இந்நிலையில், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஹைட்ரஜன் புத்தாக்கத்திற்கான மையம் என்னும் ஆய்வுக்கூடம் வியாழக்கிழமை (ஜூலை 25) திறக்கப்பட்டு உள்ளது.
திறப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங், இத்தகைய ஆய்வுக் கூடம் தென்கிழக்கு ஆசியாவிலேயே சிங்கப்பூரில்தான் அமைக்கப்பட்டு உள்ளது என்றார்.
சிங்கப்பூரில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களை நேரடி பயன்பாட்டு முறைக்கு மாற்ற இந்தப் புதிய ஆய்வு நிலையம் உதவும் என்றும் அவர் கூறினார்.
“இந்த ஆய்வுக்கூடம் முதன்முதலில் கடந்த 2022ஆம் ஆண்டு மெய்நிகர் வடிவில் திறக்கப்பட்டு இயங்கியது.
“நவீன ஹைட்ரஜன் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள $4.2 மில்லியன் மதிப்பீட்டிலான 17 பரிசோதனைத் திட்டங்களுக்கு அது உதவியது,” என்றார் டாக்டர் டான்.
தொடர்புடைய செய்திகள்
அந்த 17 திட்டங்களின் தற்போதைய நிலவரம் பற்றியும் அவற்றை வர்த்தகமயமாக்குவதற்குத் தேவைப்படும் கால அவகாசம் பற்றியும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் கேள்வி எழுப்பியது.
அதற்குப் பதில் அளித்த ஆய்வு நிலைய இயக்குநர் யான் நிங், ஒவ்வோர் ஆய்வுத் திட்டத்திற்கும் ஏறத்தாழ $250,000 நிதி வழங்கப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்டார்.
வெவ்வேறு வகையான ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களைச் சோதனை செய்து ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த நிதி ஊக்கம் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.