தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோதிவிட்டுத் தப்பிச் சென்ற 3 வாகன ஓட்டுநர்கள் மீது குற்றச்சாட்டு

1 mins read
ad70c437-67c2-409d-91b4-09d4e6bfc786
புக்கிட் பாத்தோக் கார்நிறுத்தம் அருகே ஒரு கார் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீது மற்றொரு கார் மோதிய சம்பவம். - படம்: காவல்துறை

மோதிவிட்டு நிற்காமல் தப்பிச்செல்லும் போக்குவரத்துக் குற்றங்களுக்காக புதன்கிழமை மூவர் மீது குற்றம் சுமத்தப்பட உள்ளது.

புக்கிட் பாத்தோக்கில் நான்கு வாகனங்கள் மீது தமது காரை மோதிய 30 வயது ஓட்டுநரும் அவர்களுள் அடங்குவார்.

ஜூலை 29ஆம் தேதி புளோக் 136 புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அருகே கார் நிறுத்தத்திற்கு வெளியே அச்சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை செவ்வாய்க்கிழமை தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

ஒரு கார் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிய பின்னர் நிற்காமல் தமது காரைச் செலுத்தி அந்த ஆடவர் தப்பித்ததாக அறிக்கை குறிப்பிட்டது.

அதேபோல, மார்ச் 19ஆம் தேதி கனரக வாகனம் ஒன்றை ஓட்டிச் சென்ற 71 வயது ஆடவர்மீதும் குற்றம் சுமத்தப்படும்.

கனரக வாகனத்தின் விரியக்கூடிய இயந்திரக் கை, எம்ஆர்டி மேம்பாலத்தில் உரசிய பின்னர் அந்த இடத்தைவிட்டு தமது வாகனத்துடன் அவர் சென்றுவிட்டதாகவும் சம்பவம் குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவில்லை என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்.

கட்டமைப்பு ஒன்றின் மீது கனரக வாகனம் மோதக் காரணமாக இருந்தது, விபத்துக்குப் பின்னர் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து சென்றது ஆகியன அந்தக் குற்றச்சாட்டுகள்.

இவர்கள் தவிர, ஆகஸ்ட் 3ஆம் தேதி தெம்பனிஸ் விரைவுச்சாலையில் கார் ஒன்றின் மீது மோதிய பின்னர் நிற்காமல் தமது வாகனத்தை ஓட்டிச் சென்ற 29 வயது ஆடவர்மீதும் குற்றம் சுமத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்