கிளமெண்டியில் கனரக வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இச்சம்பவம் திங்கட்கிழமை நடந்தது. அந்த வாகனத்தில் இருந்த பொருள்கள் அனைத்தும் சாலையில் சிதறிக்கிடந்தன.
“கிளமெண்டி அவென்யூ 6இல் நடந்த விபத்து பற்றித் திங்கட்கிழமை பிற்பகல் 12.54 மணிக்குத் தகவல் கிடைத்தது. அதுபற்றி விசாரித்து வருகிறோம்,” என்று காவல்துறை கூறியது.
சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனை செல்ல மறுத்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
இந்த விபத்து நடந்த சாலை, தீவு விரைவுச்சாலையை ஆயர் ராஜா விரைவுச்சாலையுடன் இணைக்கும் வழித்தடம். காமன்வெல்த் அவென்யூ வெஸ்டுக்குப் பிறகு இருக்கும் சாலைகள் மூடப்படுவதாக பகல் 1.08 மணிக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் டுவிட்டரில் பதிவிட்டது.
இந்த விபத்து குறித்தும் போக்குவரத்து இடையூறுகள் குறித்தும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு டெலிகிராம் குழு மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இரவு 7 மணி வரை போக்குவரத்து நெரிசல் நீடித்தது. இரவு 8.30 மணிக்கு அச்சாலை போக்குவரத்திற்கு மீண்டும் திறந்துவிடப்பட்டது.