சிங்கப்பூரில் தனியார் வாடகை கார் உரிமம் பற்றிய தகவல்கள் திட்டமிடப்பட்டதைவிட சில வாரங்களுக்கு முன்பே கசிந்தன.
அதற்கு நிலப் போக்குவரத்து ஆணையத்திற்குத் தகவல் தொழில்நுட்பச் சேவை வழங்கும் ‘என்சிஎஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த குழுவினரின் மனிதத் தவறே காரணம் எனப் போக்குவரத்து மூத்த துணையமைச்சர் ஏமி கோர் திங்கட்கிழமையன்று (மார்ச் 3) நடந்த நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.
வாடகைக்கு விடுவதற்காகப் பதிவுசெய்யப்படும் கார்களை மூவாண்டுக்கு விற்பனை செய்யக்கூடாது என்ற தகவல், மார்ச் மாதத்தில் நடக்கும் நாடாளுமன்ற அமர்வில் போக்குவரத்து அமைச்சின் வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தின்போது வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.
ஆனால், அதற்கு முன்னரே சில பயனர்களுக்கு அத்தகவல் கசிந்தது.
இத்தகவல் திட்டமிடப்பட்டதைவிட பிப்ரவரி 16ஆம் தேதி முன்கூட்டியே தவறுதலாக வெளியீடு கண்டதாக ‘என்சிஎஸ்’ நிறுவனம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
வாடகைக்கு விடப்படும் கார்களை விற்பனை செய்ய வேண்டிய காலம் குறித்த தகவல்கள் எப்போது பயனர்களுக்குக் காட்டப்பட வேண்டும், எந்தெந்த பயனர்களுக்குக் காட்ட வேண்டும் போன்ற விவரங்களைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என டாக்டர் கோர் கூறினார்.
இதன் விளைவாக, குறிப்பிட்ட சில பயனர்களுக்கு அத்தகவல் கசிந்தது என்றார் அவர்.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய தகவல் கசிந்தது தொடர்பில் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசல் புவா வின் கேள்விக்கு பதிலளித்தபோது டாக்டர் கோர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், அச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுமா அதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா போன்றவற்றை திருவாட்டி புவா கேட்டறிந்தார்.
அதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க ‘என்சிஎஸ்’ நிறுவனம் கூடுதல் சோதனைகளைத் தங்கள் நடைமுறையில் சேர்த்துள்ளதாகவும் புதிதாக ஓர் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் டாக்டர் கோர் கூறினார்.
மேலும், அந்த அமைப்பின் மூலம் மூத்த மென்பொருள் வடிவமைப்பாளர் ஒருவர், ஏதேனும் புதிய தகவல்களை வெளியிடுவதற்குமுன் அதில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அனைத்து தகவல் தொழில்நுட்பப் பணிகளை மதிப்பாய்வு செய்வார் என்றும் மூத்த துணையமைச்சர் விவரித்தார்.