தென்கிழக்கு ஆசியாவில் இணைய அடிமை வேலைக்கு ஆட்கடத்தல்: 9 நகரங்களில் சோதனை

தென்கிழக்கு ஆசியாவில் இணைய அடிமை வேலைக்கு ஆட்கடத்தல்: 9 நகரங்களில் சோதனை

2 mins read
d00b4f0d-9136-48ab-b6c4-69f48e1021c5
மகாராஷ்டிரா, டெல்லி போன்ற நான்கு மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். - படம்: ஹிந்துஸ்தான் டைம்ஸ்

புதுடெல்லி: இந்தியாவிலிருந்து செயல்படும் ஆட்கடத்தல் கும்பல் ஒன்றைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து நான்கு மாநிலங்களில் உள்ள ஒன்பது நகரங்களில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தீவிர சோதனை நடத்தியுள்ளது.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலருக்கும் ஆசை வார்த்தை காட்டி, அவர்களை மியன்மார், கம்போடியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள மோசடிக் கும்பல்களுக்கு விற்கும் கும்பல் பல்வேறு நகரங்களில் செயல்படுகிறது.

எல்லைதாண்டிய இணையக் குற்றக் கும்பல்களால் நடத்தப்படும் மோசடி நிலையங்களுக்கு இந்தியர்களை அந்தக் கும்பல் அனுப்பி வைக்கிறது. அதனை இணையவழியான அடிமை மையங்கள் என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்படுபவர்கள் இணைய நிதி மோசடிகளைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். வெளிநாட்டில் வேலை, அதிக சம்பளம் எனக் கூறப்படுவதை நம்பி அந்தக் கும்பல்களிடம் ஏராளமானோர் சிக்குகிறார்கள்.

கும்பல்களின் இருப்பிடங்களை அறியும் நோக்கில், மகாராஷ்டிரா, புதுடெல்லி, உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.

அந்த மாநிலங்களில் உள்ள மும்பை, டெல்லி, காசிப்பூர், கோண்டா, ஷஹாரன்பூர் போன்றவை உள்ளிட்ட ஒன்பது நகரங்களில் சோதனை நடத்தப்பட்டதாக புதன்கிழமை (மே 6) சிபிஐ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“வேலை மோசடியால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, நாடு தழுவிய விரிவான விசாரணைக்குப் பின்னரே தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

“இந்த ஆட்கடத்தல் கட்டமைப்புடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் காண, மின்னிலக்க நாணயப் பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட விரிவான நிதிப் பகுப்பாய்வுகளையும் சிபிஐ மேற்கொண்டுள்ளது.

“சோதனைகளின்போது, ​​குற்றஞ்சாட்டக்கூடிய ஆதாரங்கள் அடங்கிய மின்னணுச் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன,” என்று சிபிஐ பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன், ஆட்கடத்தலுக்கு உதவியதாக ஆடவர் ஒருவர் அந்தச் சோதனையின்போது கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஆட்கடத்தல் கும்பல்களிடம் சிக்குவோரிடமிருந்து கடவுச்சீட்டுகள் பறிக்கப்படும். அவர்களை உடல்ரீதியாகவும் உள்ளம்ரீதியாகவும் துன்புறுத்தியதாகப் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

“சோதனை நடத்தப்பட்ட வளாகங்களில், பாதிக்கப்பட்டவர்கள் நடமாட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அவர்களை விடுவிப்பதற்கான பிணைத்தொகைக்காக அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து நிதி உதவி கோருமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்,” என்றும் அந்தப் பேச்சாளர் விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்