தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹியூம் எம்ஆர்டி நிலையம் பிப்ரவரி 28ல் திறப்பு

2 mins read
திட்டமிடப்பட்டதற்கு முன்பாகவே திறக்கப்படுகிறது
da452140-7e48-4bb8-a690-4fefc9c26b5d
டௌன்டவுன் பாதையில் அமைந்துள்ள ஹியூம் ரயில் நிலையம். - படம்: சீ ஹொங் டாட்/ஃபேஸ்புக்

புக்கிட் தீமா வட்டாரத்தில் அமைந்துள்ள டௌன்டவுன் பாதையின் ஹியூம் ரயில் நிலையம், திட்டமிடப்பட்டதற்கு முன்பாக பிப்ரவரி 28ஆம் தேதி திறக்கப்படவிருக்கிறது.

போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் ஜனவரி 24ஆம் தேதி இதை அறிவித்தார்.

டௌன்டவுன் பாதையின் ஹில்வியூ நிலையத்திற்கும் பியூட்டி வோர்ல்டு நிலையத்திற்கும் இடையே ஹியூம் ரயில் நிலையம் அமைந்துள்ளது. டௌன்டவுன் பாதையின் இரண்டாம் கட்டக் கட்டுமானத்தில் திறக்கப்படும் இறுதி நிலையம் இது.

டௌன்டவுன் பாதையின் இரண்டாம் கட்டச் சேவை 2015ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கியது.

ஹியூம் நிலையம், பிப்ரவரி 28ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குத் திறக்கப்படும். முன்னதாக, இந்த ஆண்டின் (2025) இரண்டாம் காலாண்டில் அது சேவை வழங்கத் தொடங்கும் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையம், குடியிருப்பாளர்கள் மேலும் எளிதாக நகருக்குள் செல்ல உதவும் என்று அமைச்சர் சீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குடியிருப்பாளர்கள் 30 நிமிடங்களில் ஹியூம் நிலையத்திலிருந்து டௌன்டவுன் நிலையத்திற்குச் செல்ல முடியும். முன்பு இதற்கு 45 நிமிடங்கள் தேவைப்பட்டன.

புக்கிட் தீமா ரயில் பசுமைப்பாதை, முன்னாள் ஃபோர்டு தொழிற்சாலை போன்றவற்றைப் பார்க்கச் செல்லும் பயணிகளுக்கு இது உதவும் என்று கூறப்பட்டது.

ஹியூம் நிலையம் திறக்கப்பட்ட பிறகு ஹில்வியூ நிலையத்திற்கும் பியூட்டி வோர்ல்டு நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் வசிக்கும் 20,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு அது சேவை வழங்கும்.

முன்னதாக, அந்த வட்டாரத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத் திட்டங்கள், பயணிகள் எண்ணிக்கை வளர்ச்சி ஆகியவை ஹியூம் நிலையத்தைத் திறப்பதற்குப் போதிய அளவில் இல்லை என்று அரசாங்கம் கூறியிருந்தது. ஆனால், ரயில் பசுமைப்பாதை, முன்னாள் புக்கிட் தீமா தீயணைப்பு நிலையம் ஆகியவற்றின் மறுமேம்பாட்டுத் திட்டங்களால் இந்த நிலைமை மாறியதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்