காவல்துறை மற்றும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிகாரிகள், சுகாதார அறிவியல் ஆணையத்தின் மின்சிகரெட் புழக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் உதவுகிறார்கள். இதில் மின்சிகரெட் தொடர்பான குற்றக் கும்பல்களைக் குறிவைப்பதும் அடங்கும்.
குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையமும், சோதனைச் சாவடிகளில் அமலாக்கத்தை முடுக்கிவிட்டுள்ளது. மேலும் மனிதவள அமைச்சைச் சேர்ந்த கிட்டத்தட்ட 700 அதிகாரிகள் மின்சிகரெட் பயனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெறுவார்கள்.
சிங்கப்பூரில் மின்சிகரெட் தொல்லையைச் சமாளிக்க அரசாங்கம் எவ்வளவு வளங்களை அர்ப்பணிக்கத் தயாராக உள்ளது என்பதை இந்த எண்கள் காட்டுகின்றன.
“மின்சிகரெட் பயன்படுத்துபவர்களைக் கண்டறிந்தால், எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி, பிற நிறுவனங்களின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும், அமலாக்கத்தை எடுக்கவும் அதிகாரம் பெறுவார்கள். அதுதான் பரந்த நிலைப்பாடு,” என்று ஆகஸ்ட் 28ஆம் தேதி, அரசாங்கத்தின் அண்மைய மின்சிகரெட் நடவடிக்கைகள் குறித்த செய்தியாளர் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறினார்.
இதற்காக, அதிகாரம் பெற்ற தங்களின் 700 அதிகாரிகளில் ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்கள் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் இணைந்து பணியாற்ற நியமிக்கப்படுவார்கள் என்று மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தெரிவித்தார்.
மாநாட்டில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறுகையில், “தேசிய சுற்றுப்புற வாரியம், தேசிய பூங்காக் கழகம், சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையம், பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவை போராட்டத்தில் இணையும் பிற அமைப்புகளாகும் என்றார்.
மின்சிகரெட் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை முழுமையாக ஆதரிப்பதாகவும், அமலாக்க சோதனைகளை முடுக்கிவிட்டதாகவும் தற்காப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
செப்டம்பர் 1 முதல் ராணுவத்தின் தண்டனை கட்டமைப்பும் அதிகரிக்கப்படுவதாக அவர் கூறினார். மின்சிகரெட்டுகள் அல்லது கேபாட்களுடன் பிடிபட்ட பணியாளர்களுக்கு அபராதம் முதல் தடுப்பு முகாம்களில் தடுப்புக்காவல் வரை தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. முழுநேரப் பணியாளர்கள் சேவையிலிருந்தும் நீக்கப்படலாம் என்றும் அவர் மேலும் விவரித்தார்.