ஆசியாவில் பெரும்பாலும் காணப்படும் ஓபன்பில் எனப்படும் ஒருவகை நாரைகள் கூட்டம் கூட்டமாக சிங்கப்பூரில் காணப்படுவதால் பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்த வகை நாரைகள் சிங்கப்பூரின் அண்டை நாடுகளில், குறிப்பாக தாய்லாந்தின் நெல் விளையும் பகுதியில் காணப்படுவது வழக்கம்.
சாம்பல் நிறம் கலந்த வெள்ளை சிறகுகள், வால்பகுதி கறுப்பு நிறத்திலும் இருக்கும் இந்த நாரைகள் கிராஞ்சி சதுப்பு நிலப் பகுதி, தெம்பனிஸ் நார்த் பகுதியில் ஜனவரி 31ஆம் தேதியும் சுங்கை புலோ இயற்கை வனப்பகுதியில் பிப்ரவரி 1ஆம் தேதியும் காணப்பட்டன.
இதன் எதிரொலியாக ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் சிங்கப்பூர் முழுவதும் உள்ள பறவை ஆர்வலர்கள் புகைப்படங்கள், காணொளிகளைப் பகிர்ந்துகொள்வதுடன் நேரடியாக ஒருவருக்கு ஒருவர் தொடர்புகொண்டு தங்கள் நேரில் காணும் காட்சிகளை மற்றவர்களுடன் தொடர்புகொண்டு அவர்களுக்கும் இந்தக் கண்கொள்ளாக் காட்சியை காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுபற்றிக் கேள்விப்பட்ட 62 வயது திருவாட்டி அனெட் கோ, இந்த நாரைகளைக் காண தெம்பனிஸ் அவென்யூ 10ல் உள்ள திடலுக்கு ஜனவரி 31ஆம் தேதி இரவு 7.00 மணிவாக்கில் சென்றார்.
அங்கு கிட்டத்தட்ட நூறு நாரைகள் பாசிர் ரிஸ் நோக்கிப் பறந்து செல்வதைக் கண்டார். மேலும் சுமார் 30 நாரைகள் திடலில் கிடைத்ததை உண்பதைக் கண்டார்.

