சிங்கப்பூர் வேலை ஆசை காட்டி மோசடி; $14,000 இழந்த இந்திய நாட்டவர்கள்

மொத்தச் சேமிப்பையும் தொலைத்துவிட்டு துயரத்தில் தவிக்கும் தமிழகக் குடும்பங்கள்

சிங்கப்பூர் வேலை ஆசை காட்டி மோசடி; $14,000 இழந்த இந்திய நாட்டவர்கள்

9 mins read
1e6423dd-a928-42b2-b054-7c5bf429a664
பண மோசடி செய்ததாகக் கூறப்படும் ஏ.ஆர்.சாய் என்ற அப்துல் ரஹீம். - படம்: தமிழ் முரசு
multi-img1 of 3

சிங்கப்பூரில் மாதம் ரூ.1 லட்சம்வரை சம்பாதிக்கலாம் என்ற வாக்குறுதியை நம்பி, தங்கள் வாழ்நாளின் ஒட்டுமொத்தச் சேமிப்பையும் இழந்து தவிக்கும் தமிழக கிராமப்புற இளையர்களின் அவலக்குரல் தற்போது இரு நாடுகளிலும் ஒலிக்கிறது.

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு பேரிடம் 14,000 வெள்ளிக்கும் (கிட்டத்தட்ட ரூ.11.5 லட்சம்) அதிகமான பணத்தைச் சுருட்டிய விவகாரத்தில், சிங்கப்பூரைச் சேர்ந்த ‘திரைப்படத் தயாரிப்பாளர்’ ஒருவர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மனிதவள அமைச்சின் பெயரில் போலியான ‘வேலை அனுமதிக் கடிதங்கள்’ (ஐபிஏ) வழங்கி இந்த ஏமாற்று வேலை அரங்கேற்றப்பட்டுள்ளது.

அந்த ஆறு பேரும் $14,000க்கும் அதிகமான பணத்தைச் செலுத்திய பிறகு, அவர்களுக்கு மனிதவள அமைச்சிலிருந்து வழங்கப்பட்டதுபோல் தோற்றமளிக்கும் வேலை அனுமதிக்கான ஆவணங்கள் அளிக்கப்பட்டன.

21 முதல் 49 வயதிற்குட்பட்ட அந்த அறுவரும், தங்களுக்குச் சிங்கப்பூரில் ஐந்து ‘ஒர்க் பெர்மிட்’ மற்றும் ஒரு ‘எஸ் பாஸ்’ கிடைத்துவிட்டதாக நம்பினர். ஆனால், அவை அனைத்தும் போலி ஆவணங்கள்.

‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழுடன் இணைந்து தமிழ் முரசு நடத்திய புலனாய்வில், இந்த மோசடியின் பின்னணியில் செயல்பட்டதாகக் கூறப்படுபவர் கண்டுபிடிக்கப்பட்டதோடு, பலரையும் வீழ்த்திய அவரது ஏமாற்று வலைகளும் அம்பலமாயின. இதன்தொடர்பில், வெளிநாட்டு ஊழியர் வேலைக்கு அமர்த்துதல் சட்டம் மற்றும் வேலைவாய்ப்பு முகமைகள் சட்டத்தின்கீழ் சாத்தியமான குற்றங்கள் குறித்து மனிதவள அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள காவல்துறை, விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனிடையே, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அப்துல் ரஹீம் என்பவர்மீது, 2025ஆம் ஆண்டில் மற்றொரு வெளிநாட்டவர் குழுவை ஏமாற்றிய இதேபோன்ற போலி வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக ஏற்கெனவே விசாரணை நடைபெற்று வருவதாக செய்தியாளர் குழு அறிகிறது.

நம்ப வைத்த ‘பிங்க் ஐசி’ 

ஆடு, மாடு மேய்ப்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், அற்றைக்கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இது குறித்து சிங்கப்பூர் காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் சிங்கப்பூருக்கு வர அனுமதி கிடைக்காமல் போனதால் அவர்களின்  உறவினரான திரு வாஞ்சூர் மைதீன் செய்யது அப்தாஹீர், 56, தற்போது சிங்கப்பூருக்கு வந்துள்ளார். இந்த மோசடிக்கு ஆளானது எப்படி என்பது குறித்து அவர் விவரித்தார்.

“தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழச்செல்வனூர் என் பூர்விகம். என் சொந்த ஊரைச் சேர்ந்த இளையர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நல்ல வேலை தேடிக்கொண்டிருந்தோம். 

‘‘அப்போது, சிற்றங்காடிப் பணியாளர் மூலமாக ‘அப்துல் ரஹீம்’ என்பவரின் அறிமுகம் கிடைத்தது. தான் ஒரு சிங்கப்பூரர் என்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என்றும் கூறிய அவர், தனது சிங்கப்பூர் அடையாள அட்டையின் புகைப்படத்தை எனக்கு அனுப்பி முழு நம்பிக்கையை ஏற்படுத்தினார்,’’ என்றார் திரு வாஞ்சூர்.

‘எஸ் பாஸ்’ பெற $4,000, ஒர்க் பெர்மிட்டிற்கு $3,000 என மொத்தம் $19,000 கட்டணமாகச் செலுத்த வேண்டுமென ரஹீம் கூறியதாக அவர் சொன்னார்.

அதன்படி, 2026 மார்ச் 6 முதல் ஜூன் 9 வரை, ‘பேநவ்‘ மற்றும் நேரடியாக வங்கிக் கணக்குகளில் ஒன்பது தவணைகளில் மொத்தம் $14,140 (கிட்டத்தட்ட ரூ.930,000) செலுத்தியபின் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக விவரித்தபோது சலனமின்றிச்  சோர்வுடன் அமர்ந்திருந்தார் திரு வாஞ்சூர்.

‘‘அந்தப் பணம் முழுவதும் தன் மனைவியுடையது என ரஹீம் கூறிய சில வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது. மேலும், அந்தத் தொகையில் திறன்பயிற்சி வகுப்பு என்ற பெயரில் ஜூன் 8 தேதியிட்ட ரசீது உருவாக்கப்பட்டு, ஒருவருக்கு $854 என மொத்தம் $4,270 தனியாக வசூலிக்கப்பட்டதும் அடங்கும்,’’ என்றும் திரு வாஞ்சூர் சொன்னார்.

சிங்கப்பூர் மனிதவள அமைச்சின் (எம்ஓஎம்) விதிமுறைகள் மாறிவிட்டன என்றும் பயிற்சி சான்றிதழ் பெற்ற பிறகே வேலை அனுமதி வழங்கப்படும் என்றும் ரஹீம் தங்களை நம்ப வைத்ததாக அவர் கூறினார். 

ஆவணங்களில் முரண்பாடுகள்

2026 ஜூன் 12ஆம் தேதியன்று, நான்கு இந்திய நாட்டவர்களுக்கு ‘டிரெய்னிங் எம்ப்ளாய்மென்ட் பாஸ்’ (டிஇபி) எனப்படும் வேலை வாய்ப்பிற்கான அனுமதிக் கடிதங்களின் மின்னிலக்க நகல்களை திரு வாஞ்சூரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ரஹீம் அனுப்பினார். 

ஜூலை முதல் வாரத்திற்குள் சிங்கப்பூருக்குச் செல்லத் தயாராகுமாறும் அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

ஆனால், ஆவணங்களில் இடம்பெற்ற அடையாள எண்களை (ஃபின் நம்பர்), மனிதவள அமைச்சின் இணையத்தளத்தில் பதிவிட்டுத் தேடியபோது, அப்படிப்பட்ட எண்களே இல்லை என்பது தெரியவந்தது. 

அதனால் ஏற்பட்ட ஏமாற்றம் குறித்து அதிர்ச்சி விலகாமல் திரு வாஞ்சூர் விவரிக்கத் தொடங்கினார்.

‘‘வேலை அனுமதிக் கடிதம் (ஐபிஏ) கிடைத்தவுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை அனைவருடனும் பகிர்ந்துகொண்டேன். ஆயினும், எதற்கும் அதுபற்றிய மேல்விவரங்களைச் சரிபார்க்கலாம் என்று தேடியபோதுதான் அதனை மனிதவள அமைச்சின் இணையத்தளத்தில் பார்க்க முடியவில்லை.

‘‘சந்தேகம் வலுக்கவே, உடனே அதுகுறித்துத் தொலைபேசியில் ரஹீமிடம் கேட்டேன். அப்போது அது தொழில்நுட்பக் கோளாறு எனக் கூறிய ரஹீம், சென்னையில் உள்ள தம் நண்பர் ‘குமார்’ என்பவரைச் சந்தித்துப் பேசுமாறு தெரிவித்தார். 

‘‘அப்போதும் அவர்கள் அது வேலை அனுமதிச் சீட்டிற்கான ஆவணம் என்று சொன்னார்கள்,’’ என்ற திரு வாஞ்சூர், எனினும் ஒருகட்டத்தில் எஞ்சிய $5,000 (கிட்டத்தட்ட ரூ.373,858) தொகையைக் கொடுத்தால்தான் அசல் ஆவணங்களைத் தருவோம் என்று அவர்கள் வற்புறுத்தியதாகவும் சொன்னார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பை நம்பி மோசடியில் சிக்கிவிட்டதாக உணர்ந்த திரு வாஞ்சூர்,  உடனே சென்னையில் உள்ள சிங்கப்பூர்த் துணைத் தூதரகத்தையும், சிங்கப்பூரில் உள்ள  மனிதவள அமைச்சை மின்னஞ்சல் மூலமும் தொடர்புகொண்டார்.

‘‘ரஹீம் அனுப்பிய ‘ஐபிஏ’ நகலை மனிதவள அமைச்சின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தோம். அதன் அடிப்படையில் ஜூன் 16 அன்று அமைச்சு அளித்த பதிலைத் தொடர்ந்து, ரஹீம் தந்த வேலை அனுமதிக் கடிதத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜே&டி எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்தின்கீழ் எந்தவொரு ‘டிஇபி’ விண்ணப்பமும் செய்யப்படவில்லை என்பது  உறுதியானது,’’ என்று திரு வாஞ்சூர் விவரித்தார்.

ஆவணத்தில் இருந்த குளறுபடி

பாதிக்கப்பட்டவர்களிடம் காட்டப்பட்ட ‘டிஇபி‘ அனுமதிக் கடிதம் 2026 ஜூன் 12 எனத் தேதியிடப்பட்டிருந்தது. 

ஆனால், அதே ஆவணத்தின் வலப்புறத்தில், ‘2026 ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் ‘டிஇபி‘ அனுமதி பெறப்பட வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மறைக்கப்பட்ட அடையாளங்கள்

பாதிக்கப்பட்டோர் தரப்பில் ஜூன் 27ஆம் தேதி சிங்கப்பூர்க் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, குழு களத்தில் இறங்கியது. தொடர்ந்து விசாரித்ததில்  சில முக்கியத் தகவல்கள் கிடைத்தன.

வேலை வாங்கித் தராமல் பணத்தை ஏமாற்றிவிட்டார் என்று குற்றம் சாட்டப்படும் சிங்கப்பூரர், இந்திய நாட்டவர்களிடம் காண்பித்த அடையாள அட்டையில்  ‘அப்துல் ரஹீம் த/பெ சுல்தானில் அரிபீன்’ என்ற பெயர் இடம்பெற்றிருந்தது.

ஆனால், அவர் சட்டப்பூர்வமாகத் தனது பெயரை ’ஏ.ஆர்.சாய்’ என மாற்றிக்கொண்டு, பழைய அடையாள அட்டையையே பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து அறிய ரஹீமைத் தொடர்புகொண்டபோது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், தான் ஒரு இடைத்தரகர் மட்டுமே என்றார்.

‘உங்கள் இயற்பெயர் என்ன? என்று கேட்டதற்கு, தன் பெயர் ஏ.ஆர்.சாய் என்றும் பிறப்பிலிருந்தே அதுதான் தன் பெயர் என்றும் அவர் உறுதிபடக் கூறினார். 

குற்றப் பின்னணி

திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் பாடகரான ரஹீமுக்கு குற்றப் பின்னணி உள்ளது.

2009ஆம் ஆண்டு வெளியான செய்தியறிக்கை ஒன்றில், அப்போது 20 வயதான ரஹீம், ஒரு டாக்சி ஓட்டுநரைத் தாக்கிக் கொள்ளையடித்ததற்காக நன்னடத்தைக் கண்காணிப்பு தண்டனை மற்றும் சமூகச் சேவைக்கு உட்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

2019ஆம் ஆண்டின் மலேசியக் காவல்துறை அறிக்கை ஒன்றில், தான் இரவலாகப் பெற்ற 30,000 மலேசிய ரிங்கிட் மதிப்பிலான படக்கருவிகளுடன் தப்பியோடிய சந்தேகப் பேர்வழியாக ரஹீமின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த மலேசியக் காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த ரஹீமின் அடையாள அட்டை எண், ஏ.ஆர்.சாயின் அடையாள அட்டை எண்ணுடன் அப்படியே ஒத்துப்போகிறது.

பிறந்தது முதலே தன் பெயர் ‘ஏ. ஆர். சாய்’ என்றும், ரஹீம் என்ற பெயரைத் தான் ஒருபோதும் பயன்படுத்தியதில்லை என்று ரஹீம் கூற, ஆனால் அவரது மனைவியின் வாக்குமூலம், கணவரின் கூற்றுக்கு முரணாக இருந்தது.

தொலைபேசியில் செய்தியாளர் குழுவிடம் பேசிய அப்பெண், தன் கணவர் சட்டபூர்வமாகவே பெயரை ‘ஏ. ஆர்.சாய்’ என்று மாற்றிக்கொண்டதாகத் தெரிவித்தார்.

அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பணம் குறித்துக் கேட்டபோது, அது தம் வீட்டுப் பணிப்பெண்ணிடமிருந்து வந்த கடன் திருப்பிச் செலுத்தல் தொகை மட்டுமே என்று அவர் சொன்னார்.

இதற்கிடையே, ரஹீம் சொன்னபடி சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் திரு வாஞ்சூர் சந்தித்த, ஏ.ஆர்.சாயின் கூட்டாளியான ‘குமார்’, இந்திய நாட்டவர் என்பதும் அவரது இயற்பெயர் ஜே.கே.சக்தி பாலாஜி என்பதும் தெரியவந்தது. அவரைத் தற்போது தொடர்புகொள்ள முடியவில்லை.

கலைந்த கனவுகள்! தொலைந்த எதிர்காலம்!

இதற்கிடையே, இந்தச்  சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இளையர்களின் குடும்பங்கள் மிகுந்த பொருளியல் நெருக்கடிக்கும் மன உளைச்சலுக்கும் தள்ளப்பட்டுள்ளன.

சிங்கப்பூரைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் என்று கூறிக்கொண்ட ஒருவரின்மூலம், தங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து இளையர்களுக்கு நல்ல வேலையைப் பெற்றுத் தந்து, அவர்களை வறுமையிலிருந்து மீட்க முயன்ற வாஞ்சூரின் மீதே மிகவும் கடுமையான சுமை விழுந்துள்ளது.

தந்தைக்குத் துணையாக சிங்கப்பூர் வந்துள்ள திரு வாஞ்சூரின் 20 வயது மகன் சுஃபி (முழுப் பெயரன்று) தமது வேதனையைப் பகிர்ந்துகொண்டார்.

“என் அப்பாவிற்கு வயதாகிவிட்டது. இதுவரை உழைத்த அவர் ஓய்வெடுக்க வேண்டிய காலம். அத்தா, என்னை உயர்கல்வி படிக்க வைக்க விரும்பினார். நான் எம்பிஏ பட்டமேற்படிப்பில் சேரவிருந்தேன். அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் கைகூடி வந்தன.

“ஆனால், இந்த சம்பவத்தால் எங்கள் குடும்பம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, என்னைத் தொடர்ந்து படிக்க சொன்ன என் பெற்றோரே தற்போது என் உயர்கல்வியை ஈராண்டுகளுக்கு ஒத்திவைத்துவிட்டு, வேலைக்குச் செல்லுமாறு சொல்கின்றனர்.

“இதனால் கல்வி, முன்னேற்றம் என அனைத்தையும் மறந்துவிட்டு வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளேன். இழந்த பணத்தை மட்டுமன்று, என் தந்தையின் மரியாதையையும் மீட்டெடுக்க வேண்டிய போராட்டம் இது,’’ என்று உறுதியுடன் கூறினார் திரு சுஃபி.

தமிழகக் கிராமங்களில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தங்கள் நிலம், ஆடு மாடுகளை விற்றும், மகள்களின் திருமணத்திற்காகச் சிறுக சிறுக சேர்த்துவைத்த நகைகளை அடகு வைத்தும், அதிக வட்டிக்குக் கடன் வாங்கியுமே இந்தப் பணத்தைத் திரட்டியதாகக் கூறுகின்றன.

இருந்த வேலையும் போனது!

ஜூலை மாதம் சிங்கப்பூருக்கு வந்து, செம்மையாக வேலை பார்த்து ஒட்டுமொத்த தலைமுறையையே வாழ்க்கையில் முன்னேற்றிவிடலாம் என்று நம்பியோர் இன்று வறுமையின்பிடியில் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

சிங்கப்பூரில் வேலை கிடைக்கும் என்று நம்பி ஏமாறியோரில் ஒருவரான சதாம் ஹூசைன், 26 வாட்ஸ் ஆப் காணொளி அழைப்பு வழியாகப் பேசினார்.

‘‘இந்த வேலை கிடைக்கும் என்று நம்பி உள்ளூரில் செய்துவந்த வேலையையும் விட்டுவிட்டேன். அன்றாட உணவுக்குக்கூட மிகுந்த சிரமமாக உள்ளது. குடும்பத்தில் யாருடனும் இயல்பாகப் பேச இயலவில்லை. 

‘‘ரஹீம் சிங்கப்பூரர் என்று சொல்லிய ஒற்றை வார்த்தைதான் அவரை மொத்தமாக நம்ப வைத்தது. 

‘‘ஏமாற்றப்படுவோம் என்று கனவிலும் நினைக்கவில்லை. வேலை அனுமதிக் கடிதம் கிடைத்தவுடன் சிங்கப்பூருக்கு வரவேண்டும் என்று அவர் சொன்னதால் விமானப் பயணச் சீட்டு வாங்க வைத்திருந்த காசை வைத்து சில நாள் செலவு செய்தோம். 

‘‘ஆனால், இப்போது கடன் ஒருபுறம், ஏழ்மை மறுபுறம். எப்படி மீள்வது என்று தெரியவில்லை,’’ என்று கண்ணீரை அடக்கிக்கொண்டு பேசினார் திரு ஹூசைன்.

அதிகாரபூர்வ நடவடிக்கை  

இதனிடையே, 2026 ஜூலை 16ஆம் தேதியன்று, மனிதவள அமைச்சின் சேவை நிலையத்திற்கு விசாரணைக்காகத் தாம் அழைக்கப்பட்டதாகத் திரு வாஞ்சூர் கூறினார். 

இச்சம்பவம் குறித்து பதிலளித்த மனிதவள அமைச்சு, விசாரணை தொடர்வதாகக் கூறியது.

‘‘மனிதவள அமைச்சின் இணையத்தளத்தில் உள்ள ‘வேலைவாய்ப்பு முகவர் கோப்பகம்’  மூலமாக ஒரு முகவர் உரிமம் பெற்றவரா என்பதை வேலை தேடுபவர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்,’’ என்று அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார். மேலும், வேலை வாய்ப்பு அல்லது வேலை அனுமதிச்சீட்டு தொடர்பான ஆவணங்களின் நம்பகத்தன்மையில் ஏதேனும் சந்தேகங்கள், பிரச்சினைகள் தென்பட்டால் ஊழியர்கள் உதவிக்கு மனிதவள அமைச்சைத் தொடர்புகொள்ளவும் அவர் அறிவுறுத்தினார்.

குடியேற்றப் பொருளியலுக்கான மனிதநேய அமைப்பின் (HOME) நிர்வாக இயக்குநர் ஸ்டெஃப்னி சோக் கூறுகையில், வேலைக்கான அசல் அனுமதி கடிதங்களை (ஐபிஏ) பெற்றிருந்தபோதிலும், சிங்கப்பூருக்கு வந்திறங்கிய பிறகு தங்களுக்கு வேலைகள் எதுவும் இல்லை என்பதை அறிந்துகொள்ளும் வெளிநாட்டு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளைத் தங்கள் அமைப்பு எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஊழியர்கள் தங்களின் ‘ஐபிஏ’க்களில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளைத் தவிர வேறு துறைகளில் பணியமர்த்தப்படும் சம்பவங்களும் சம்பளம், முகவர் கட்டணம், அவர்களிடம் அளிக்கப்பட்ட முகவரி போன்ற பிற விவரங்கள்கூட வாக்குறுதி அளிக்கப்பட்டபடி இல்லாமல் இருக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளன என்றும் அவர் சொன்னார்.

இருப்பினும், போலியான ‘ஐபிஏ’க்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் அரிதானவை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

‘TWC2’ அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஈத்தன் குவோ, தங்களது அழைப்பு நிலையம் 2025ல் 26,000க்கும் மேற்பட்ட உரையாடல்களைப் பெற்றது என்றும் அவற்றில் 1,300 உரையாடல்கள் ஐபிஏ தொடர்பான விவகாரங்கள் என்றும் தெரிவித்தார். 

“சிங்கப்பூர்ச் சட்ட அமைப்பின்மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அனைத்து வங்கிச் சான்றுகளையும் உரையாடல்களையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளோம். நிச்சயம் நீதி கிடைக்கும்,” என நம்பிக்கையோடு சொன்னார் திரு வாஞ்சூர்.

இதற்கிடையே, மோசடிக்கு இலக்காகி இருப்போருக்கு இலவசச் சட்ட உதவி வழங்க முன்வந்துள்ளார் ‘சவுத் ஏஷியா லெக்ஸ்’ சட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் இந்திய வழக்கறிஞருமான திரு எம். ஜான் பால். 

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தோ பாயோவில் நேரில் சந்தித்தபோது, வேலை அனுமதிச்சீட்டு வாங்கித் தருவதாகக் கூறி முகவர் ஒருவர் ஆயிரக்கணக்கில் ரொக்கப் பணத்தைப் பெற்று ஏமாற்றியதாக அவர்கள் கூறியதைத் திரு ஜான் நினைவுகூர்ந்தார். 

இலவசச் சட்ட உதவி வழங்க முன்வந்துள்ள சவுத் ஏஷியா லெக்ஸ் சட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் இந்திய வழக்கறிஞருமான திரு எம். ஜான் பால்.
இலவசச் சட்ட உதவி வழங்க முன்வந்துள்ள சவுத் ஏஷியா லெக்ஸ் சட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் இந்திய வழக்கறிஞருமான திரு எம். ஜான் பால். - படம்: ஜான் பால்

‘‘நீதிக்காகக் காத்திருக்கும் அவர்களின் சட்டபூர்வ முயற்சிக்கு வலுசேர்க்கும்  ஆவணங்களைச் சேகரித்து, அவற்றை மனிதவள அமைச்சுமூலம் சரிபார்த்தபோது, அவை போலி என்பது உறுதியானது. இவ்விவகாரத்தில் உரிய புகார் அளிக்கப்பட்டு விசாரணை தொடர்கிறது. காத்திருக்கிறோம்,’’ என்றார் அவர்.

‘‘எளிய, வசதி குறைந்த தொழிலாளர்கள் வெளிநாட்டில் வேலை தேடும்போது தங்களின் சேமிப்பை இழப்பதைத் தடுக்க, வேலை தேடுபவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களையும் பாதுகாப்பையும் வழங்கக் கோரி தமிழ்நாட்டு அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளோம்,” என்றும் திரு ஜான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
பண மோசடிமனிதவள அமைச்சுஇந்தியர்கள்ராமநாதபுரம்வெளிநாட்டு ஊழியர்

தொடர்புடைய செய்திகள்