சிங்கப்பூரில் நடந்த மணவிலக்கு வழக்கில் தன் சொத்து குறித்து முழு விவரங்களை வெளியிடாத கணவனின் செயலால் மனைவிக்கான இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்டது.
அந்த 52 வயது கணவர் வெளியிடாத தகவல்களில் அவரது ஒரு நிறுவனத்தை விட்டு விலகியபோது கிடைத்த $1.4 மில்லியன் இழப்பீட்டுத் தொகையும் அடங்கும். அந்த நிறுவனத்தின் துணை நிறுவனராக அவருக்கு மாதம் $73,000 கிடைத்தது.
விசாரணை பல கட்டங்களாக நடந்ததில் மனைவியின் வழக்கறிஞர்கள் அவரிடம் பல விவரங்களையும் ஆவணங்களையும் கேட்டனர். அதன்வழியாக பலவிதங்களில் சொத்துகள் கணவரிடம் இருப்பது கண்டறியப்பட்டது.
மனைவிக்கென ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டிருந்த 32 விழுக்காட்டு இழப்பீட்டுத் தொகையை, உண்மை நிலவரங்களை அறிந்தபின்பு 35 விழுக்காட்டுக்கு உயர்த்த வேண்டியதாக இருந்ததாக ஜூலை 27ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் முடிவில் தீர்ப்பளித்த நீதிபதி ஹூ ஷியு பெங் கூறினார்.
வெளிப்படையாக நடந்துகொள்ளாமல் தவிர்த்து கணவர் உண்மையை மறைத்ததால் அவர் கடமை தவறிவிட்டார் எனவும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்தார்.
மணவிலக்கு கோரிய தம்பதியரின் மொத்த சொத்தின் மதிப்பு $7.6 மில்லியன் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதில் கணவனின் தனிப்பட்ட சொத்து $4.8 மில்லியன் எனவும் மனைவிக்கு உள்ள சொத்தின் மதிப்பு $1.5 மில்லியன் எனவும் அறியப்படுகிறது. இருவருக்கும் $1.3 மில்லியன் மதிப்புள்ள கூட்டுச் சொத்தும் உள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டுமுதல் புற்றுநோய் உட்பட பல்வேறு மருத்துவப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு பிறகு அதிலிருந்து குணமடைந்துவரும் 55 வயது மனைவிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் $6,000 என மொத்தம் $144,000 தொகையைப் பராமரிப்புக் கட்டணமாக கணவர் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பில் உள்ளது.
தம்பதிகள் 2004ஆம் ஆண்டுமுதல் தொடர்பில் இருந்து 2011ல் திருமணம் செய்தனர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 2020ஆம் ஆண்டில் மனைவி மணவிலக்கு கோரினார்.


