ஹைஃபிளக்ஸ் நிறுவனம், துவாஸ்ப்ரிங் திட்டத்திற்காகக் கடன் பெறுவதற்குச் சிறிய நிறுவனங்களை நாடியதாக அரசுத் தரப்பின் துணைத் தலைமை வழக்கறிஞர் கிறிஸ்டஃபர் ஓங் கூறியிருக்கிறார்.
வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதில் அந்நிறுவனம் சிரமத்தை எதிர்நோக்கியதாக அவர் சொன்னார்.
தோல்வியில் முடிந்த தண்ணீர்ச் சுத்திகரிப்பு ஆலைத் திட்டத்தில் சம்பந்தப்பட்ட முன்னாள் மூத்த நிர்வாகிகளின் மீதான வழக்கு விசாரணை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) தொடங்கியது.
ஆரம்பத்தில் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்க விரும்புவதாகச் சில வங்கிகள் தெரிவித்திருந்தன என்றார் திரு ஓங்.
2011ல் பொதுப் பயனீட்டுக் கழகத்திற்குக் குறைந்த விலையில் தண்ணீரை விற்பதற்கு மின்சார விற்பனையைப் பயன்படுத்த ஹைஃபிளக்ஸ் திட்டமிட்டது வங்கிகளுக்குத் தெரியவந்தது. அதன் பின்னர் அவை அக்கறை தெரிவித்தன.
ஒருங்கிணைந்த தண்ணீர், மின்சாரத் திட்டத்துக்கு நிதி ஒதுக்க ஹைஃபிளக்ஸ் முன்னுரிமைப் பங்குகளை வழங்கியது. நிறுவனம் நொடித்துப்போனதால் கிட்டத்தட்ட 34,000 முதலீட்டாளர்களுக்குப் பணம் எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் முதலீடு செய்த மொத்தத் தொகை $900 மில்லியன்.
ஹைஃபிளக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஒலிவியா லாம், வர்த்தக ஆபத்துகள் குறித்த தகவல்களை வெளியிடவில்லை என்று திரு ஓங் அரசு நீதிமன்றத்தில் அவரது வாதத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்டார். பெரும் தண்ணீர்த் திட்டமொன்றைக் கைப்பற்றுவதற்கு அவை பாதகமாக அமையக்கூடும் என்றும் அதனால் முதலீட்டாளர்கள் பின்வாங்கக்கூடும் என்றும் அவர் கருதியதாகத் திரு ஓங் சொன்னார்.
துவாஸ்ப்ரிங் திட்டத்தின் மூலம் மின்சாரச் சந்தைக்குள் ஹைஃபிளக்ஸ் நுழைய முற்பட்டதாக அவர் தெரிவித்தார். அந்தத் திட்டத்தின் தொடர்பில் தகவல்களை வெளியிடத் தவறியதற்காக ஏழு பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஒருவர் குற்றத்தை ஏற்கெனவே ஒப்புக்கொண்டுவிட்டார்.
லாம் உட்பட ஆறு பேர் குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்துள்ளனர். ஆகஸ்ட் 11 தொடங்கிய வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 5ஆம் தேதி வரை 56 நாள்களுக்கு நடைபெறவிருக்கிறது.

