பத்தாண்டுகளுக்கு முன்பு தமக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதைக் கண்டறிந்தார் திரு ரெவி அந்தோனி பெர்னாடஸ், 72. வாடகை உந்து வண்டி ஓட்டுநரான திரு ரெவி, தமது ரத்த அழுத்தம் நாள் முழுவதும் மாறுபடுவதையும் சாலையில் வாகனம் ஓட்டும்போது பொதுவாக அதிகமாக இருப்பதையும் கவனித்தார்.
மருந்துகள் உட்கொள்வது தவிர தமது மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப வாழ்க்கைமுறை மற்றும் உணவுப் பழக்கங்களில் தீவிரமான மாற்றங்களைச் செய்தார் அவர்.
“மது மற்றும் சர்க்கரை பானங்களை குறைத்தல், அதிக உடற்பயிற்சி, நாள்தோறும் முடிந்த அளவுக்கு நடைப்பயிற்சி போன்றவற்றைச் செய்து வருகிறேன்,” என்றார் திரு ரெவி.
2018 தேசிய ஊட்டச்சத்து ஆய்வில், கிட்டத்தட்ட 90% சிங்கப்பூரர்கள் ஒரு நாளைக்கு 9 கிராம் உப்பை உட்கொள்கிறார்கள் என்று தெரியவந்தது. இது பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாகும்.
இவ்வாண்டின் தேசிய இதய வாரம் மற்றும் உலக இதய தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர் இதய அறக்கட்டளை, தொழில்நுட்பக் கல்விக் கழக மேற்கு வளாகத்துடன் இணைந்து செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) ஓர் உப்புச் சுவை வரம்புச் சோதனையை நடத்தியது.
உப்பின் சுவையை பங்கேற்பாளர்கள் இந்த வரம்புச் சோதனையின் மூலம் அடையாளம் கண்டு, தங்கள் சோடியம் அளவைக் கட்டுப்படுத்தவும் அதிக உணவுத் தெரிவுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் பற்றியும் அறிந்துகொண்டனர்.
தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள் உட்பட கிட்டத்தட்ட 1,000 பேர் கலந்துகொண்ட இந்த வரம்புச் சோதனையில், ‘அதிகமானோர் ஒரே நேரத்தில் கலந்துகொண்ட வரம்புச் சோதனை’ என்ற சிங்கப்பூர் சாதனை படைக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், வளாகத்தில் சுகாதாரப் பரிசோதனைகள், விளையாட்டுகள், ரத்த அழுத்த விழிப்புணர்வு போன்ற நடவடிக்கைச் சாவடிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
“காலப்போக்கில் அதிக அளவு சோடியம் உண்பதால் அதிக அளவு உயர் ரத்த அழுத்தமும் ஏற்படும் அபாயம் உள்ளது. நாளடைவில் இது மாரடைப்பு, இதயச் செயலிழப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்களுக்கு வழிவகுக்கலாம்,” என்றார் தேசிய பல்கலைக்கழக இதய மையத்தின் மூத்த ஆலோசகர் லின் வெய்ச்சின்.
“சிங்கப்பூரில் பல சுவையான உணவு எளிதில் கிடைக்கிறது. மேலும், சிங்கப்பூரர்களின் பரபரப்பான வாழ்க்கைமுறை காரணமாக பலர் அடிக்கடி வெளியே சாப்பிடுவதுண்டு. இதனால், சோடியம் அளவுகளைப் பொதுவாக நாம் புறக்கணிப்பதுண்டு,” என்றார் மூத்த ஆலோசகர் லின்.
“பலதரப்பட்ட சுவையான உணவு சுற்றி இருப்பினும், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் கண்டிப்பாகப் பின்பற்றலாம்,” என்றார் தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர் சரவணன் மனோஜ் குமார், 18.
“சுவையாக இருந்தாலும், சில இந்திய உணவுகளில் குறிப்பாக சோடியம் அதிகமாக இருக்கும். நமக்குப் பிடித்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் தொடர்ந்து சுவைகளை ரசிக்க முடியும் என்று நினைக்கிறேன்,” என்றார் அவர்.