சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட தனது இரண்டாவது காரை ஹியுண்டே நிறுவனம் ஜூலை 19ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த ஐயோனிக் 6 செடேன் (Ioniq 6 sedan) காரை வாங்க விரும்புவோர் அதற்கான முன்பதிவில் கலந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதில் நான்கு மாதிரிகள் உள்ளன. அதில் இரண்டு கார்கள் மணிக்கு 55 கிலோவாட் மின்கலன் சக்தி கொண்டது. அதற்கு ‘ஏ’ பிரிவு வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) தேவைப்படும்.
அடுத்த இரண்டு மாதிரி கார்கள் மணிக்கு 77 கிலோவாட் மின்கலன் சக்தி கொண்டது. இதற்கு ‘பி’ பிரிவு வாகன உரிமைச் சான்றிதழ் தேவைப்படும்.
இந்த நான்கு வகை கார்களின் விலை சிஓஇ சான்றிதழுடன் $192,150லிருந்து $244,850 வரை இடைப்பட்டிருக்கும்.
இந்த கார்களுக்கான தயாரிப்புப் பணிகள், பூலிம் அவென்யூவில் உள்ள சிங்கப்பூர் ஹியுண்டே மோட்டார் குழுமப் புத்தாக்க மையத்தில் ஜூன் இறுதியில் தொடங்கின.
ஜூரோங் புத்தாக்க வட்டாரத்தில் உள்ள சிங்கப்பூர் ஹியுண்டே மோட்டார் குழுமப் புத்தாக்க மையம், ஒரு மேம்பட்ட ஆய்வு மற்றும் கார் பாகங்களை ஒன்றிணைக்கும் மையம். 2023 நவம்பரில் திறக்கப்பட்ட இந்த மையம் குடியரசின் முதலாவது மின்சார வாகன தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தவிர, ஹியுண்டே அதன் மின்சார வாகனங்களின் உரிமையாளர்களுக்கான மின்னூட்டத் தெரிவுகளை விரிவுபடுத்துகிறது. ஹியுண்டே உரிமையாளர்களுக்கு டெஸ்டினேஷன் சார்ஜிங் (destination charging) - அதாவது வீட்டிற்கு வெளியே கட்டணம் வசூலிக்கும் இரண்டாவது வழங்குநராக எஸ்பி மொபிலிட்டியுடன் ஹியுண்டே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது தற்போதைய சார்ஜ்+ வசதியுடன் ஒப்பிடுகையில் கூடுதல் வசதியாகும்.