தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நான் ஓர் அரசியல் அகதி: லீ சியன் யாங்

4 mins read
c385c15f-a684-412c-99e9-592dc4e58d9f
திரு லீ சியன் யாங்கையும் அவரது மனைவி லீ சூட் ஃபெர்னையும் விசாரணையில் உதவுமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டதை அடுத்து, ஜூன் 15, 2022 அன்று திரு லீ சிங்கப்பூரை விட்டு வெளியேறினார். - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்

1951 ஐநா அகதிகள் மாநாட்டின் கீழ், தாம் சிங்கப்பூரின் அரசியல் அகதியாகிவிட்டதாக, திரு லீ சியன் யாங், அக்டோபர் 22ஆம் தேதி அன்று ஒரு ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“நான் 2022ல் புகலிடப் பாதுகாப்பு கோரினேன். எனக்கு எதிரான சிங்கப்பூர் அரசாங்கத்தின் தாக்குதல்கள் பொதுக் குறிப்பேடுகளில் உள்ளன. அவர்கள் என் மகன் மீது வழக்குத் தொடர்ந்தனர். என் மனைவிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகளைக் கொண்டு வந்தனர். மேலும் போலியான காவல்துறை விசாரணையைத் தொடங்கினர். அது பல ஆண்டுகளாக நீடித்தது. இந்த உண்மைகளின் அடிப்படையில், நான் எனக்கு எதிரான துன்புறுத்தல் ஆபத்தை எதிர்கொள்கிறேன் என்றும் அதன் காரணமாக பாதுகாப்பாக சிங்கப்பூருக்கு நான் திரும்ப முடியாது என்றும் பிரிட்டன் தீர்மானித்துள்ளது,” என்று திரு லீ அந்தப் பதிவில் தெரிவித்தார்.

“கடைசி முயற்சியாக நான் புகலிடப் பாதுகாப்பை நாடினேன். நான் ஒரு சிங்கப்பூர் குடிமகனாகத் தொடர்ந்து இருப்பதால், ஒரு நாள் பாதுகாப்பாக நாடு திரும்புவேன் என்று நம்புகிறேன்,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

“2017ல், என் சகோதரி வெய் லிங்கும் நானும், ‘சியன் லூங்கை ஒரு சகோதரன் என்ற முறையிலோ அல்லது ஒரு தலைவர் என்ற முறையிலோ நாங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை’ என்று அறிவித்தோம். சிங்கப்பூர் அரசாங்க அமைப்புகள், எங்களுக்கு எதிராகவும் எனது குடும்பத்திற்கு எதிராகவும் நடந்துகொள்வதாய் நாங்கள் அஞ்சுவதாகக் கூறினோம். அந்த ஆபத்து காரணமாக, வெய் லிங்கின் இறுதிச் சடங்கில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை,” என்றும் திரு லீ மேலும் கூறியிருந்தார்.

சிங்கப்பூரின் தேசத் தந்தையான நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் இளைய மகன் திரு லீ, தனக்கு புகலிடம் வழங்கப்பட்டுள்ளதா என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. இது அவரை முதலில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் பிரிட்டனில் தங்கி, அதற்குப் பின்னர் அங்கு நிரந்தரமாகத் தங்கும் நிலையை ஏற்படுத்திக்கொடுக்கும்.

திரு லீ சியன் யாங்கையும் அவரது மனைவி லீ சூட் ஃபெர்னையும் விசாரணையில் உதவுமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டதை அடுத்து, ஜூன் 15, 2022 அன்று திரு லீ சிங்கப்பூரை விட்டு வெளியேறினார். அதன் பிறகு அவர்கள் இருவரும் சிங்கப்பூர் திரும்பவில்லை.

பிரிட்டனில் புகலிடம் கோரி விண்ணப்பிக்க, ஒருவர் தாங்கள் குடியுரிமை பெற்ற நாட்டிற்கு அல்லது பிறந்த நாட்டிற்குத் திரும்புவதற்கு அஞ்ச வேண்டும் என்று புகலிட விண்ணப்பங்கள் பற்றிய பிரிட்டனின் அரசாங்க தகவல் கையேடு கூறுகிறது. விண்ணப்பதாரர்கள் தஞ்சம் பெற்றவுடன் அகதிகளாக கருதப்படுவார்கள் என்று அது மேலும் கூறுகிறது.

புரோகிரசிவ் சூப்ராநியூக்லியர் பால்சி (progressive supranuclear palsy) எனப்படும் அரிய மூளைக் கோளாறு கண்டறியப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அக்டோபர் 9ஆம் தேதி தனது 69வது வயதில், அவரது மூத்த சகோதரி டாக்டர் லீ வெய் லிங் மரணமடைந்தார்.

டாக்டர் லீயின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க திரு லீ சிங்கப்பூருக்குத் திரும்புவதற்கான தகுதி குறித்த பிரச்சினை மீண்டும் தலையெடுத்தது.

கண் விழித்தல் மற்றும் இறுதிச் சடங்கிற்காக தாம் சிங்கப்பூர் திரும்பப் போவதில்லை என்றும், அவரது மகன் லி ஹுவான்வு இறுதிச் சடங்கு காரியங்களுக்கான உதவிகளைச் செய்வார் என்றும் திரு லீ சியன் யாங் முன்பு கூறியிருந்தார்.

அக்டோபர் 11 அன்று, ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறை, திரு லீயும் திருமதி லீயும் குடியரசிற்குத் திரும்புவதற்கு சட்டப்பூர்வ தடைகள் எதுவும் இல்லை என்று கூறியது.

“அவர்கள் தாராளமாக சிங்கப்பூருக்குத் திரும்பலாம்,” என்று காவல்துறை கூறியது.

நடந்துகொண்டிருக்கும் காவல்துறை விசாரணையின் மத்தியில், தான் சிங்கப்பூருக்குத் திரும்ப முடியாது என்று கூறினார். அதற்கு மூலகாரணம் மூத்த அமைச்சர் லீ மற்றும் அவரது இளைய உடன்பிறப்புகளுக்கு இடையே ஆக்ஸ்லி சாலையில் உள்ள மறைந்த தந்தையின் வீட்டின் நிலை குறித்த சட்ட ரீதியான கருத்து வேறுபாடு என்று 2023ஆம் ஆண்டில், திரு லீ சியன் யாங் ஒரு ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ஜூன் 2022ல் புலனாய்வு தொடர்பான நேர்காணலில் கலந்துகொள்வதன் மூலம் விசாரணைக்கு உதவுமாறு திரு லீ சியன் யாங்கையும் அவரது துணைவியாரையும் காவல்துறை கேட்டுக் கொண்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அவர்கள் ஆரம்பத்தில் அதற்கு ஒப்புக்கொண்டனர், ஆனால் இறுதியில் திட்டமிடப்பட்ட நேர்காணலுக்கு வரவில்லை. ஜூன் 15, 2022 அன்று அவர்கள் இருவரும் சிங்கப்பூரை விட்டு வெளியேறினர். பின்னர் திரும்பி வரவில்லை,” என்றும் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

திரு லீயின் புகலிட நிலை குறித்த ‘தி கார்டியனின்’ செய்தித் தாளின் கேள்விகளுக்குப் பதிலளித்த சிங்கப்பூர் அரசாங்கம், “அவருக்கு எதிரான குற்றவியல் வழக்குகள் மற்றும் நாட்டில் அரசியல் அடக்குமுறை பற்றிய அவரது கருத்துகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை,” என்று கூறியது.

“சிங்கப்பூரின் நீதித்துறை பாரபட்சமற்றது. அது தன்னிச்சையான முடிவுகளை எடுக்கிறது. இதனால்தான் சிங்கப்பூரர்கள் நீதித்துறையின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்,” என்று சிங்கப்பூர் அரசாங்கம் மேலும் கூறியது.

குறிப்புச் சொற்கள்