பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் ஏன் உண்மையைச் சொல்லவில்லை என்ற கேள்விக்கான அவரது பதிலைத் தனித்துப் பார்க்கக்கூடாது என்றும் அது மற்றொரு நடப்பின் விளைவு என்றும் துணை முதன்மை மாவட்ட நீதிபதி லியூக் டான் கூறியுள்ளார்.
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் மீதான விசாரணையின் மூன்றாம் நாளின்போது அவர் இவ்வாறு கூறினார்.
2021ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தின்போது தான் என்ன செய்யவேண்டும் என்று திருவாட்டி கான், திரு சிங்கிடம் குறுந்தகவல் அனுப்பிக் கேட்டது, நீதிமன்றத்தில் திருவாட்டி கான் கொடுத்த ஆதாரங்களுக்கு முரணானது என்று தற்காப்பு வழக்கறிஞர் ஆண்ட்ரே ஜுமாபோய் வாதிட்டார்.
இருந்தபோதும், அதற்கு முந்திய நாளான அக்டோபர் 3ஆம் தேதி பிரித்தம் சிங், திருவாட்டி கானின் வீட்டுக்குச் சென்றபோது கலந்துரையாடல் நடைபெற்றது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை என்று நீதிபதி டான் கூறினார்.
உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கேள்வி கேட்டதால் திருவாட்டி கான் திரு சிங்கிற்குக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குறிப்பிட்ட நீதிபதி டான் திருவாட்டி கான் செய்தது, திரு சிங் அவரிடம் கூறியதாகச் சொன்ன சொற்களுடன் ஒத்துப்போவதாக வாதிடப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.
“முக்கியமான முரண் என்ன, எந்த முரணையும் நான் காணவில்லை,” என்று நீதிபதி கூறினார்.
பிறகு, பாலியல் வதைக்கு ஆளாவோரை அரசாங்கம் கையாளும் விதத்தைப் பற்றி தயாரிக்கப்பட்ட, ஆனால் பயன்படுத்தப்படாத அறிக்கை பற்றித் திருவாட்டி கானிடம் திரு ஜுமாபோய் கேட்டார்.
பதற்றத்தில் அந்த அறிக்கையை எழுதியதாகக் கூறிய திருவாட்டி கான் அதனை, திருவாட்டி லோ பெய் யிங், திரு யுதிஷ்டிரா நாதன் இருவரைத் தவிர வேறு யாருக்கும் அனுப்பவில்லை என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“எழுதப்பட்ட அறிக்கைக்கும் திரு சிங்கிற்கும் சம்பந்தமில்லை. எனவே உங்களைத் திரு சிங் பொய்யுரைக்கச் சொல்லவில்லை என்பதை அது காட்டுகிறது,” என்றார் வழக்கறிஞர் ஜுமாபோய்.
அக்டோபர் 4ஆம் தேதி இரவு, உண்மை சொல்வதற்கான காலம் கடந்துவிட்டது என்று திரு சிங் கூறியதாகத் திருவாட்டி கான், இந்த வழக்கின் முதல் நாளன்று கூறியதைச் சுட்டினார் திரு ஜுமாபோய்.
“இதை நீங்கள் எதிர்த்துப் பேசவில்லையா? அதுதானே இயல்பான பதிலாக இருந்திருக்கும்? உங்களால் நான் இந்தச் சிக்கலில் மாட்டிக்கொண்டேன் என்று அந்தச் சந்திப்பின்போது அவரிடம் நீங்கள் சொல்லவில்லையே,” என்று வழக்கறிஞர் கேட்டார்.
“பொய்கூறும்படி திரு சிங் சொல்லவில்லை என்பதால்தான் நீங்கள் அவ்வாறு பேசவில்லை,” என்றார் அவர்.
பொய்யைத் தொடர்ந்து சொல்லும்படியான கட்டாயத்திற்கு ஆளானதால் பொய் சொன்னதாகத் திருவாட்டி கான், பாட்டாளிக் கட்சியின் மற்ற உறுப்பினர்களிடம் சொல்லவுமில்லை என்றும் தற்காப்புத் தரப்பு கூறியது.
பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருவாட்டி நிக்கோல் சியா, திரு ஜெரால்டு கியம், செங்காங் குழுத்தொகுதி உறுப்பினர்கள் போன்றோரிடம் திருவாட்டி கான் பேசியபோதும்கூட இந்தத் தகவலைச் சொல்லவில்லை என்று வழக்கறிஞர் கூறினார்.
அத்துடன், 2021ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி கட்டொழுங்குக் குழு நடத்திய விசாரணையின்போதும் கட்சித்தலைவர்கள் சொல்லித்தான் தான் தொடர்ந்து பொய்யுரைத்ததாகத் திருவாட்டி கான் குறிப்பிடவில்லை என்று வழக்கறிஞர் சுட்டினார்.
“கட்சித் தலைவர்களைக் காப்பாற்ற எண்ணியிருந்தேன்,” என்று திருவாட்டி கான் பதிலளித்தார்.
அத்துடன், கட்சித் தலைவர்களைச் ‘சக்திவாய்ந்தவர்கள்’ என வர்ணித்த திருவாட்டி கான், அவர்கள் தன்னை நல்லெண்ணத்துடன் வழிநடத்தியதாக நம்பியதாகக் கூறினார்.
செப்டம்பர் 2021ல் உண்மையைச் சொல்லாததற்காகத் திருவாட்டி கான் தந்த விளக்கங்களும் பொய்யைத் தொடர்ந்து சொல்லும்படி பாட்டாளிக் கட்சித் தலைவர்கள் சொன்னதாக அவர் வாதிடுவதும் ஒன்றுக்கொண்டு இசைவாக இல்லை என்று வழக்கறிஞர் ஜுமாபோய் கூறினார்.
அப்போது ஏன் உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை என கேட்கப்பட்ட திருவாட்டி கான், ஷிங்கல்ஸ் கிருமித்தொற்றால் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை எனக் கூறியிருந்தார். ஆனால், இந்த விவகாரம் மீண்டும் தலைதூக்காது என எண்ணியதால் தாம் உண்மை கூறவில்லை என்று திருவாட்டி கான், நீதிமன்ற விசாரணையின் முதல் நாளின்போது சொல்லியிருந்தார்.
இந்த இரண்டு கூற்றுகள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதைச் சுட்டிய வழக்கறிஞர் ஜுமாபோய், “உண்மையை மறைக்கச் சொல்லியோ பொய்யைத் தொடர்ந்து உரைக்கும்படியோ கேட்கப்பட்டதால் திருவாட்டி ரயீசா உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை என்பதற்கான எந்தக் குறிப்பும் இல்லை,” என்று கூறினார்.

