செம்பவாங் வட்டாரத்தில் யார் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் அங்கு திட்டங்களும் திட்டப்பணிகளும் நடந்தேறும் என்று கூறியிருப்பதன் மூலம் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் நேர்மையற்ற தன்மை தெரிகிறது என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் சாடியுள்ளார்.
“வெறும் ஒரு மாதகாலத்திற்கு இங்கு வந்து பார்த்துவிட்டு இத்தகைய அறிக்கைகளை விடக்கூடாது,” என்றார் திரு ஓங்.
செம்பவாங் குழுத்தொகுதியில் அமைச்சர் ஓங் தலைமையில் மக்கள் செயல் கட்சி அணி களமிறங்கியுள்ளது. அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது.
சன் பிளாசா கடைத்தொகுதிக்கு அருகிலுள்ள திடலில் திங்கட்கிழமை (ஏப்ரல் 28) நடந்த மசெக பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், காட்டுப்பகுதியாகவும் காலியிடங்களாகவும் இருந்த செம்பவாங் இன்று துடிப்புமிக்க நகரமாகத் திகழ்வதைச் சுட்டினார்.
புக்கிட் கேன்பரா, யூசோஃப் இஷாக் பள்ளிவாசல், உட்லேண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்களைச் சான்றாகக் குறிப்பிர்ர அவர், “சிங்கப்பூர் - ஜோகூர் விரைவு ரயில் கட்டமைப்பு உள்ளிட்ட திட்டங்களும் வரவுள்ளன,” என்றார்.
இத்திட்டங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும்போது செம்பவாங் குழுத்தொகுதிக்குத் தலைமை தாங்கும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டாமா என மக்களைப் பார்த்து அமைச்சர் ஓங் கேள்வியெழுப்பினார்.
செம்பவாங் வெஸ்ட் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க இரண்டு மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகச் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான் கூறியதற்குப் பதிலளித்த செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதி வேட்பாளர் போ லி சான், மக்கள் சந்திப்பில் குடியிருப்பாளர்கள் தங்கள் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்வதற்கு நேரமளிப்பதாகக் கூறினார்.
“அரசியல் பதவி வகிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களை, ‘ஆமாம்’ சொல்லும் உறுப்பினர்கள் என்கிறார்கள். நான் கடின உழைப்புக்கும் நல்வாழ்வுக்கும் ஒளிமயமான எதிர்காலத்துக்கும் ஆமாம் சொல்லும் உறுப்பினர்,” என்றார் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மரியம் ஜஃபார்
தொடர்புடைய செய்திகள்
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) நடந்த பிரசாரக் கூட்டத்தில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி சார்பாக செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதியில் போட்டியிடும் டாக்டர் சீ சூன் ஜுவான், முழுநேர நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றுவது குறித்து தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்த திருவாட்டி மரியம் ஜஃபார், “முழுநேரம் பணியாற்றுவதும் சிறப்பாகப் பணியாற்றுவதும் ஒன்றல்ல,” என்றார்.
“பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும் நல்ல முடிவுகள் அளிப்பதுமே முக்கியம்,” என்று திருவாட்டி மரியம் ஜஃபார் வலியுறுத்தினார்.

