தீவிரவாத சிந்தனையால் ஈர்க்கப்பட்ட நண்பர்கள் தமக்கு இருந்ததாகக் கூறிய பிரதமர் லாரன்ஸ் வோங், அத்தகையவர்களுக்கு சரியான பாதைக்குத் திரும்ப உதவி தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.
அவ்வாறு ஈர்க்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கி உதவும் தொண்டூழியர்களைப் பாராட்டும் உள்துறை அமைச்சின் சமூக வருடாந்தரப் பாராட்டு விழாவைச் சிறப்பித்த திரு வோங், அவ்வாறு கூறினார்.
செப்டம்பர் 13 ல் ‘பார்க்ராயல் கலெக் ஷன்’ மரினா பேயில் நடந்த அந்த நிகழ்ச்சியில், சமய மறுவாழ்வுக் குழு, அமைப்புகளுக்கிடையிலான மறுவாழ்வுக்குப் பிந்திய பராமரிப்புக் குழு, சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம், பள்ளிவாசல் தலைவர்கள், தொண்டூழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரில் சுய தீவிரவாதப் போக்கு அதிகரித்து வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளால் மட்டும் பிரச்சினையின் மூல காரணத்தைத் தீர்க்க முடியாது என்று பிரதமர் வோங் கூறினார்.
விபரீதிமான புரிதலுடன் அளிக்கப்படும் சமய விளக்கங்கள் தீவிரவாதத்திற்கு மக்களைத் தூண்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
தீவிரவாத கொள்கைகள் மீது நாட்டம் உள்ளவர்களைத் திருத்துவதில் சமயத் தலைவர்களும் சமூகத் தன்னார்வலர்களும் முக்கியமான பங்கு வகிப்பதாக அவர் கூறினார்.
தவறான வழியில் சென்ற நண்பர்கள் தமக்கு இருந்ததாகத் திரு வோங், நிகழ்ச்சியின்போது கூறினார்.
“இது எளிதானது அல்ல என்று எனக்குத் தெரியும். எனக்கும் தவறான வழியில் சென்ற நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்ககளின் இளமைக் காலத்தில் எனக்கு அவர்களைத் தெரியும், அவர்கள் தீவிரவாதத்திற்கு மாறுவார்கள் என்று நான் ஒருபோதும் எதிர்பார்த்திருக்க மாட்டேன்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“ஆனால் இது போன்று நடக்கத்தான் செய்கின்றன. அவை நடக்கும்போது, நாம் விரைவாகச் செயல்பட்டு, அவர்களை விரைவில் சரியான பாதைக்குத் திரும்ப உதவ வேண்டும்,” என்றும் திரு வோங் கூறினார்.
“உங்களின் அன்புக்குரிய ஒருவர் தீவிரவாதக் கருத்துக்களுக்கு அடிபணிவதை நீங்கள் கவனித்தால், அவர்கள் உதவும் பொருட்டு உடனடியாக அவர்கள்பற்றித் தெரிவியுங்கள்,”என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் அரசாங்கமும் சமூகமும் இணைந்துள்ள 20 ஆண்டு பங்காளித்துவ உறவைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம், முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும் உள்துறை மூத்த துணை அமைச்சருமான இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிம் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.