அர்ப்பணிப்புடன் மனமார சேவையாற்றும் அணியைத் திரட்டியுள்ளேன்: பிரதமர் வோங்

1 mins read
e2eeb60a-11d0-4e6e-861f-6fdebcc5c833
பிரதமர் லாரன்ஸ் வோங் உத்தேச வேட்பாளர்களை அறிவிக்கும் காணொளியைத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.  (மேல் வரிசை) திரு ஜெஃப்ரி சியாவ், திருவாட்டி வெலரி லீ, திரு அலெக்ஸ் இயோ. (நடு வரிசை) டாக்டர் சூ பெய் லிங், திரு தினே‌ஷ் வாசு தாஸ், திரு டேவிட் ஹோ. (கீழ் வரிசை) திரு ஃபூ செசியாங், திருவாட்டி ஹஸ்லினா அப்துல் ஹலிம், திருவாட்டி எலிசா சென். - படங்கள்: மக்கள் செயல் கட்சி, லிம் யௌஹுய், இங் சோர் லுவான்

சிங்கப்பூரர்களுக்கு சேவை செய்வதில் அர்ப்பணிப்புடன் இருக்கும் அணியையே பொதுத் தேர்தலில் களமிறக்க திரட்டியிருப்பதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

மக்கள் செயல் கட்சியின் மேலும் 9 உத்தேச வேட்பாளர்கள் அடங்கிய காணொளி வெளியானதைத் தொடர்ந்து திரு வோங் அவ்வாறு சொன்னார்.

“எங்களுக்கு உங்கள் ஆதரவு தேவை. நமக்காகவும் நமது அன்புக்குரியவர்களுக்காகவும் இன்னும் சிறந்த சிங்கப்பூரை உருவாக்குவோம்,” என்றார் திரு வோங்.

தேர்தல் ஆணை (ஏப்ரல் 15) அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்துக்குள் ஒன்பது உத்தேச வேட்பாளர்கள் அடங்கிய காணொளி வெளியானது. அதில் மூவர் மக்கள் செயல் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டனர்.

முன்னாள் நிரந்தரச் செயலாளர் ஜெஃப்ரி சியாவ், கல்வியாளர் சூ பெய் லிங் இருவரும் சுவா சூ காங் குழுத்தொகுதியில் அறிமுகம் செய்யப்பட்டனர். அறநிறுவன இயக்குநர் டேவிட் ஹோ, வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் அறிமுகம் செய்யப்பட்டார்.

அடுத்தவர்களைக் கைகொடுத்து தூக்கிவிடுவதோடு ஒருவருக்கு ஒருவர் ஆதரவளிக்கும்போது சிங்கப்பூர் இன்னும் ஒலிமயமான எதிர்காலத்தைக் கைப்பற்றும் என்று பிரதமர் வோங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

அத்தகைய அணுகுமுறைதான் சிங்கப்பூரை இன்னும் சிறப்பானதாக்குகிறது என்றார் அவர்.

ஏப்ரல் 12ஆம் தேதிக்குப் பிறகு உத்தேச வேட்பாளர்கள் குறித்து அண்மையில் வெளிவந்த காணொளியுடன் மூன்று காணொளிகள் பதிவேற்றப்பட்டுள்ளன.

இதற்குமுன் வெளிவந்த காணொளியில் மக்கள் செயல் கட்சி மொத்தம் 17 உறுப்பினர்களை அறிவித்தது.

குறிப்புச் சொற்கள்