தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜாலான் காயு தனித்தொகுதியில் இங் சீ மெங் போட்டி

2 mins read
குடியிருப்பாளர்கள்மீது அக்கறை கொள்வதை நிறுத்திவிடவில்லை என்கிறார்
d6d6a07d-0f47-475e-b2dc-4017ac09474e
தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர் பொறுப்பில், கொவிட்-19 பெருந்தொற்று போன்ற கடினமான காலகட்டங்களில் ஊழியர்களுக்கு தாம் உதவி செய்திருப்பதாக திரு இங் சீ மெங் (வலக்கோடி) கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) தலைமைச் செயலாளர் இங் சீ மேங், புதிய ஜாலான் காயு தனித்தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

மே 3ஆம் தேதி நடைபெறும் பொதுத் தேர்தலில், கெபுன் பாரு தனித்தொகுதியில் திரு ஹென்ரி குவெக்கும் இயோ சூ காங்கில் திரு யிப் ஹொன் வெங்கும் போட்டியிடவுள்ளனர்.

மக்கள் செயல் கட்சியின் டெக் கீ கிளையில் சனிக்கிழமை (ஏப்ரல் 19) காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின்போது மூத்த அமைச்சர் லீ சியன் லூங், இவர்களை வேட்பாளர்களாக அறிவித்தார்.

தொகுதியில் மக்களுக்கு என்னென்ன விவகாரங்கள் முக்கியம் என்பதை ஜாலான் காயு வட்டாரவாசிகளுடன் கொண்டிருந்த தம் உரையாடல்கள் வழியாக மேலும் புரிந்துகொண்டதாக திரு இங் தெரிவித்தார்.

“ஜாலான் காயு குடியிருப்பாளர்கள், தாங்கள் கூறுவதைக் கேட்கும் ஒருவரை விரும்புகின்றனர். நல்ல வீடு ஒன்றை உருவாக்குவதற்காக, உண்மையான நடவடிக்கையுடன் தயாராகவுள்ள ஒருவரை அவர்கள் விரும்புகின்றனர்,” என்று திரு இங் கூறினார்.

என்டியுசி உடனான தம் பணியில், கொவிட்-19 பெருந்தொற்று போன்ற கடினமான காலகட்டத்தில் ஊழியர்களுக்கு தாம் உதவி செய்திருப்பதாக திரு இங் கூறினார்.

பணியின்போது காயமடைந்த ஊழியர்களுக்கு உதவுவது, குறைந்த சம்பள ஊழியர்களுக்குச் சம்பள உயர்வைப் பெற்றுத் தருவது போன்ற மற்ற திட்டங்களிலும் திரு இங் ஈடுபட்டுள்ளார்.

“இந்த முயற்சிகள், கொள்கைகள் பற்றியது மட்டுமல்ல. மக்களும் தங்களது வாழ்க்கையும் அவர்கள் எதிர்நோக்கும் உண்மையான சவால்களையும் பற்றியது. ஏன் அரசியலுக்குத் திரும்பியுள்ளீர் எனச் சிலர் என்னிடம் கேட்கக்கூடும். என் பதில் எளிமையானது: ஏனெனில் நான் அக்கறை கொள்வதை நிறுத்திவிடவில்லை,” என்று திரு இங் கூறினார்.

2020 பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தபோதும், திரு இங் மனவுறுதியுடனும் பொறுப்புணர்வுடனும் என்டியுசி தலைமைப் பொறுப்பில் செயல்பட்டதாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறினார்.

கொவிட்-19 பெருந்தொற்றின்போது திரு இங்கின் தலைமையில் என்டியுசி முக்கியப் பங்காற்றியதாக திரு லீ சொன்னார்.

குறிப்புச் சொற்கள்