டான் சுவான் ஜின், செங் லி ஹுவி விவகாரம்

பிரதமர் லீ: நான் முன்னரே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்

3 mins read
68d02b0f-269a-4f4d-9956-17829dfa6f45
நாடாளுமன்றத்தில் டான் சுவான் ஜின், செங் லி ஹுய் இருவரின் தகாத உறவு குறித்து பிரதமர் லீ சியன் லூங் பேசினார். - படம்: தொடர்பு தகவல் அமைச்சு

முன்னாள் நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின், மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹுய் இருவருக்கும் இடையே இருந்த தகாத உறவு தொடர்பில் முன்னதாகவே தாம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் புதன்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்குத் தாம் ஏன் இவ்வளவு காலம், அதாவது கிட்டத்தட்ட ஈராண்டுக்கும் மேலாக எடுத்துக்கொண்டார் என்று கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சுநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பிரதமர் லீ குறிப்பிட்டார்.

“இது நியாயமான ஒரு கேள்விதான். பின்னோக்கிப் பார்த்தால், அதிலும் குறிப்பாக இப்போது பார்க்கும்போது நான் ஒப்புக்கொள்கிறேன். நான் இந்த விவகாரம் குறித்து முன்னரே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்,” என்றார் அவர்.

இந்த விவகாரம் குறித்துத் தாம் கொஞ்ச கால அவகாசம் கொடுத்ததால் தகாத உறவில் இருந்த இருவருக்கும் வெளியேறும் கட்டம் சற்று கடுமையல்லாததாக இருந்ததென அவர் விவரித்தார். தற்போது அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஏற்பட்டுள்ள வலி, அவமானம் இரண்டிலுமிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் தாம் தாமதித்ததாக அவர் கூறினார்.

“அவர்களின் குடும்பத்தாரைப் பாதுகாப்பதற்கு நான் அதிக முக்கியத்துவம் அளித்துவிட்டேன், சற்று கூடுதலாகவே அளித்துவிட்டேன்,” என்றார் பிரதமர் லீ.

“திரு டான், திருவாட்டி செங் இருவரும் தங்களின் உறவைத் தொடர்ந்தது வருத்தமளிக்கும் ஒன்று. அதனால் இருவரும் வெளியேறவேண்டியிருந்தது. இதை எண்ணிப் பார்க்கையில் நான் இந்த விவகாரம் குறித்து முன்னரே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தவணைக்காலத்தின் இடைப்பகுதிக்கு முன்னதாக நான் அவ்வாறு செய்திருக்க வேண்டும்,” என்றார் அவர்.

திரு டான், திருவாட்டி செங் இருவரின் தகாத உறவு குறித்த தகவல்களைப் பிரதமர் லீ நாடாளுமன்ற அமர்வின்போது விளக்கினார்.

நவம்பர் 2020ல் அவர்களின் தகாத உறவு குறித்து அறிந்ததை அடுத்து இருவருக்கும் தனித்தனியே மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டது. இருவரும் தங்களின் உறவைத் துண்டித்துக்கொள்வதாகக் கூறியும் அவ்வாறு செய்யவில்லை.

“மிக அண்மையில், இவ்வாண்டு பிப்ரவரியில் நான் அவர்களிடம் மீண்டும் தனித்தனியே பேசினேன். தாம் செய்தது தவறு என்று திரு டான் ஒப்புக்கொண்டார். பதவி விலக முன்வந்தார். நான் ஏற்றுக்கொண்டேன். இருப்பினும் அவர் பதவி விலகுவதற்கு முன் அவரின் பொறுப்பில் உள்ள கெம்பாங்கான்-சாய் சீ, மரின் பரேட் குழுத்தொகுதி குடியிருப்பாளர்களின் தேவைகள் கவனித்துக்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய வேண்டியிருந்தது,” என்றார் திரு லீ.

இதுபோன்ற உறவுகள் அவ்வப்போது முளைப்பதுண்டு என்ற திரு லீ, கடந்தகாலத்திலும் இனி எதிர்காலத்திலும் அவ்வாறு நேர்வதைத் தவிர்க்க முடியாது என்றார். ஆனால் இத்தகைய விவகாரங்கள் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கை பல்வேறு அம்சங்களைப் பொறுத்து உள்ளது என்றார் அவர். தகாத உறவு ஏற்பட்ட சூழ்நிலை, எந்த அளவுக்குத் தகாததாக உள்ளது, குடும்பச் சூழல்கள் போன்றவற்றைப் பொறுத்துள்ளது என்றார் அவர்.

ஒரு நாடாளுமன்ற நாயகருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையே திருமணமாகி இருந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களா என்று உறுப்பினர்களிடம் திரு லீ வினவினார். அதில் தவறேதும் இல்லை என்ற அவர், தகாத உறவு என்பது வேறுபட்டது என்றும் அதன் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்றும் அவர் கூறினார்.

லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரனைக் கைது செய்து விசாரித்தல், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல், ரிடவுட் ரோடு வாடகை தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுகள் என அண்மைய நிகழ்வுகளைப் பொதுமக்கள் மிக உன்னிப்பாகக் கவனித்து வருவதாக பிரதமர் லீ குறிப்பிட்டார்.

“சிங்கப்பூரை ஆட்சிசெய்யும் பொறுப்பை மசெக எவ்வளவு கடுமையாகக் கருதுகிறது என்பதையும் நாடாளுமன்றத்திற்கும் சிங்கப்பூரர்களுக்கும் அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டையும் இந்த விவகாரங்களை நாம் இதுவரை கையாண்ட அணுகுமுறை உணர்த்துகிறது,” என்றார் திரு லீ.

குறிப்புச் சொற்கள்