சிங்கப்பூரர்கள் வாக்களிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் : ஜார்ஜ் கோ

சிங்கப்பூரர்கள் வாக்களிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் : ஜார்ஜ் கோ

2 mins read
a1d39909-7cd7-4df9-a126-5efa5759e96a
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அதிபர் தேர்தலில் போட்டியின்றி ஒருவர் தேந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக சிங்கப்பூரர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று போட்டிக் களத்தில் இறங்கியுள்ள தொழில் முனைவர் ஜார்ஜ் கோ கூறி உள்ளார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடத் தமக்கு தகுதி இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நொவினாவில் உள்ள தேர்தல் துறையில் இன்று காலை பத்து மணியளவில் அவர் தகுதிச் சான்றிதழுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொண்டார். அவரது மனைவி லைசா சுமாலியும் நான்கு பிள்ளைகளும் அவருடன் வந்திருந்தனர்.

அரை மணி நேரத்துக்கு முன்பாவே சிவப்பு 'டீ' சட்டை அணிந்துவந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் அங்கு கூடியிருந்தனர்.

பொருள்கள் விநியோகிக்கும் நிறுவனமான ஓசியா இண்டர்நேஷனல் குழுமத்தின் நிர்வாகத் தலைவரான திரு கோ, 63, கடந்த ஐந்து அதிபர் தேர்தலில் மூன்று முறை போட்டியின்றி அதிபர் தேர்வானதாக தெரிவித்தார்.

வருகிற அதிபர் தேர்தலிலாவது மக்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு தர தாம் விரும்புவதாக அவர் சொன்னார்.

"என் வாழ்க்கையைத் தொடங்கியபோது என்னிடம் ஒன்றுமே இல்லை.

ஆனால் எனக்கு இந்த நிலம் அதிகம் கொடுத்துள்ளது. இப்போது நாட்டுக்குச் சேவையாற்ற நேரம் வந்துள்ளது," என்று ஜார்ஜ் கோ மேலும் கூறினார்.

அரசாங்க நிறுவனம் அல்லது அரசியல் கட்சித் தொடர்பு இல்லாத தனிப்பட்ட தொழில் முனைவராக தாம் முன்னேறியுள்ளதை அவர் சுட்டினார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் குறித்து பேசிய அவர், தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக கணக்காய்வாளர், வழக்கறிஞர், நிபுணர்கள் உள்ளடக்கிய குழுவை அமைத்துள்ளதாகக் கூறினார்.

வேட்பாளராக போட்டியிடும் தகுதி தமக்கு இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பல மாத ஊகங்களுக்குப் பிறகு அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக கடந்த திங்கள்கிழமை அறிக்கை வாயிலாக திரு கோ தெரிவித்தார்.

இந்தத் தேர்தலில் ஏற்கெனவே போட்டியிடப் போவதாக மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் அறிவித்துள்ளார்.

இதனால் ஜூலை 7ஆம் தேதி கட்சி மற்றும் அரசாங்கப் பொறுப்புகளிலிருந்து விலகுவதாகவும் அவர் ஜூன் 8ஆம் தேதி தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டிலிருந்து மொரோக்கோ தூதராக இருந்துவரும் திரு கோவும் அப்பதவியிலிருந்து விலகியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்