தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குரல் கொடுப்பேன், கேள்விகள் எழுப்புவேன்: மசெக வேட்பாளர் கோ ஸி கீ

3 mins read
1735ebd1-d4ff-46d8-95d0-776459e20510
மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் குடியிருப்பாளர்கள் பலனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று மக்கள் செயல் கட்சி வேட்பாளர் திருவாட்டி கோ ஸி கீ தெரிவித்துள்ளார். அத்திட்டங்களை அவர் பிரசாரக் கூட்டத்தில் பட்டியலிட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சி சார்பாகப் போட்டியிடும் கோ ஸி கீ, நாடாளுமன்ற உறுப்பினராகத் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்கள் நலனுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து, சவால்மிக்க கேள்விகள் எழுப்புவது திண்ணம் என்று உறுதி அளித்துள்ளார்.

மேலும், குடியிருப்பாளர்கள் பலனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை (ஏப்ரல் 30) இரவு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் இத்திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.

குழந்தைப் பராமரிப்பு நிலைய வசதிகள், வேலை வாய்ப்பு ஆலோசனைக் கூட்டங்கள், பல்வேறு தலைமுறையினர்கள் இணைந்து செயல்படும் நடவடிக்கைகள் போன்ற திட்டங்கள் மவுண்ட்பேட்டன் தனித்தொகுதிக் குடியிருப்பாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் காத்திருப்பதாக அவர் கூறினார்.

பிரசாரக் கூட்டம் சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்தில் உள்ள ‘ஹோம் ஆஃப் அத்லெட்டிக்ஸ்’ விளையாட்டரங்கில் நடைபெற்றது.

2011ஆம் ஆண்டிலிருந்து மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயலாற்றிய திரு லிம் பியாவ் சுவான் பிராசரக் கூட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

தமது 93 வயதுத் தாயார் கீழே விழுந்து காயமடைந்ததாகவும் தற்போது அவர் குணமடைந்துவிட்டபோதிலும் அவரைப் பார்த்துக்கொள்ள விரும்புவதாகவும் பகிர்ந்துகொண்ட அவர், எனவே தாம் அரசியலிலிருந்து ஓய்வுபெற முடிவெடுத்ததாகக் கூறினார்.

மக்கள் செயல் கட்சி வேட்பாளரான திருவாட்டி கோ, ஆற்றல்மிக்கவர் என்று கூறிய திரு லிம் அவருக்கு ஆதரவு அளித்து வாக்களிக்கும்படி தொகுதிவாசிகளைக் கேட்டுக்கொண்டார்.

திருவாட்டி கோவை எதிர்த்துப் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஜெரமி டானைப் பற்றித் திரு லிம் பேசினார்.

திரு டானைத் தாம் மதிப்பதாக அவர் கூறினார்.

இருப்பினும், இளையரான திரு டான், தேர்தலில் வெற்றி பெற்றால் மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியை நிர்வகிக்கும் அனுபவம் அவருக்கு இல்லை என்றார் திரு லிம்.

மாறாக, திருவாட்டி கோ மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரானால் அவருக்குத் தமது உதவி கிடைப்பது உறுதி என்றார் அவர்.

மேலும், ஒட்டுமொத்த மக்கள் செயல் கட்சியே அவருக்குப் பக்கபலமாக இருக்கும் என்றும் இதன் விளைவாக மவுண்ட்பேட்டன் தனித்தொகுதிக் குடியிருப்பாளர்களுக்குத்தான் லாபம் என்றும் திரு லிம் கூறினார்.

அவரைத் தொடர்ந்து, பிரசாரக் கூட்டத்தில் பேசிய திருவாட்டி கோ, ‘மவுண்ட்பேட்டன்-நமது இல்லம், நமது கனவு’ என்ற முழக்கவரியுடன் தேர்தலில் களமிறங்குவதாகத் தெரிவித்தார்.

இரண்டு பதின்மவயதுப் பிள்ளைகளுக்குத் தாயாரான திருவாட்டி கோவுக்குக் கடல்துறை வழக்கறிஞராக ஏறத்தாழ 22 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

அதுமட்டுமல்லாது, இவர் கடந்த பல ஆண்டுகளாக புக்கிட் தீமா வட்டாரத்தில் அடித்தள அமைப்புத் தொண்டூழியராகச் சேவையாற்றியவர்.

இந்நிலையில், மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் தமது தொகுதிவாசிகளுக்காக அயராது உழைக்கக் கடப்பாடு கொண்டிருப்பதாகப் பிரசாரக் கூட்டத்தின்போது திருவாட்டி கோ வாக்குறுதி தந்தார்.

தொகுதி உலா மேற்கொண்டபோது குடியிருப்பாளர்கள் தம்மை மிகுந்த அன்புடன் வரவேற்றதாக அவர் கூறினார்.

இத்தேர்தலில், தொகுதிக்குத் தகுந்த நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பது மட்டும் முக்கியமன்று என்றும் நாட்டுக்கும் மிகச் சிறந்த முறையில் சேவையாற்றுபவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு வாக்காளர்களுக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தம்மை எதிர்த்துப் போட்டியிடும் திரு டான், ‘பிட்காயின்’ மின்னிலக்க நாணயத்தில் கவனம் செலுத்துமாறு பரிந்துரைத்திருப்பதைத் திருவாட்டி கோ சுட்டினார்.

இது விந்தையாக உள்ளது என்றார் அவர்.

‘பிட்காயின்’னில் முதலீடு செய்யும் பணம் திரும்ப வரும் என்ற உத்தரவாதம் இல்லை என்றார் திருவாட்டி கோ.

அவ்வாறு செய்வது சூதாட்டத்துக்குச் சமம் என்றும் மக்கள் செயல் கட்சி சூதாட்டத்தை நம்புவதில்லை என்றும் அவர் கூறினார்.

தமது எதிர்த்தரப்பினரின் நோக்கம் குறித்து அவர் சந்தேகம் எழுப்பினார்.

குறிப்புச் சொற்கள்