தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வசதிகுறைந்தோருக்கு வாய்ப்புகள் கிடைப்பதை உறுதிசெய்வேன்: டேவிட் ஹோ

2 mins read
14b7e166-492b-4e0a-b3df-8b815dd68a90
ஏப்ரல் 29ஆம் தேதி, புக்கிட் பாத்தோக் வெஸ்ட் உணவங்காடி நிலையத்தில் தொகுதி உலா சென்ற  ஜூரோங் ஈஸ்ட்- புக்கிட் பாத்தோக் குழுத் தொகுதி மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் (இடமிருந்து) முரளி பிள்ளை, டேவிட் ஹோ, லீ ஹாங் சுவாங், ரஹாயு மஹ்சாம் (வலமிருந்து மூன்றாவது), கிரேஸ் ஃபூ (வலது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நாடாளுமன்றத்திற்குத் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் வசதிகுறைந்த பின்னணியிலிருந்து வந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதை உறுதிசெய்வேன் என அரசியலுக்குப் புதியவரான 37 வயது டேவிட் ஹோ தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 29) மதிய உணவு வேளையில், புக்கிட் பாத்தோக் வெஸ்ட் உணவங்காடி நிலையத்தில் தொகுதி உலா சென்றபோது ஜூரோங் ஈஸ்ட்- புக்கிட் பாத்தோக் குழுத் தொகுதி மக்கள் செயல் கட்சி வேட்பாளரான அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், அப்பிரச்சினை அவரது மனத்திற்கு மிகவும் நெருக்கமானது என்றார் அவர்.

தமது பிள்ளைப் பருவத்தில் பார்வையற்ற தமது தாயாரை அழைத்துகொண்டு பல்வேறு காப்பிக் கடைகளுக்கு மெல்லிழைத்தாள்களை விற்கச் சென்றதாகக் கூறிய திரு ஹோ, தாம் கோழிச் சோறு விற்பனைச் செய்யும் கடைக்காரராக விரும்பியதாகவும் சொன்னார்.

வறுமையிலிருந்து விடுபட அதுவே சிறந்த வழி எனத் தாம் எண்ணியதாக ஏப்ரல் 28 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு நடந்த ஃபுல்லர்ட்டன் பிரச்சாரக் கூட்டத்தில் தமது முதல் அரசியல் உரையில் அவர் கூறினார்.

ஆனால், உயர்நிலைப் பள்ளியில், தமது நண்பருக்குக் கணிதப் பாடம் கற்பிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது ஆசிரியராக வேண்டும் என்ற ஆசை எழுந்ததாக அவர் குறிப்பிட்டார்.

சில பிள்ளைகள் பூப்பந்து மைதானத்தில் விளையாடும்போது, பூப்பந்து வீரராக விரும்புவது போல, ஆசை என்பது நமது அனுபவங்களின் வெளிப்பாடு என்பதை அப்போது தாம் உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் கல்வியாளரான அவர், இளையர்கள் தங்கள் பலங்களையும் ஆர்வமுள்ள பிரிவுகளையும் கண்டறிய வாய்ப்புகள் வழங்கப்பட்டால் அனைத்து துறைகளிலும் அவர்களால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றார் அவர்.

“மக்களின் லட்சியம்மீது எமக்கு அக்கறை இருக்கிறது. அதை அடைவதில் அவர்களுக்கு ஏதேனும் உதவித் தேவைப்பட்டால், நான் அதில் திறமையானவனாக இல்லாவிட்டாலும் அதற்காகக் குரல் கொடுப்பேன். அதைப் பற்றிப் பேச வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது,” எனச் சிங்கப்பூர் இளையர்கள் அக்கறைகொள்ளும் பிரச்சினைகளைக் கையாளத் தம்மிடம் திட்டம் உள்ளதாகத் திரு ஹோ கூறினார்.

குறிப்புச் சொற்கள்