சிங்கப்பூரில் உள்ள பன்முகத் திறமையாளர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புவதாக நடிகர், இசையமைப்பளர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
வரும் செப்டம்பர் 19ஆம் தேதி வெளியாகவுள்ள விஜய் ஆண்டனியின் 25ஆவது படமான ‘சக்தித் திருமகன்’ படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
‘அருவி’, ‘வாழ்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து, நடிக்கும் இத்திரைப்படத்தின் முதல் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஆகஸ்ட் 24 ஆம் தேதியன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்பூரில் இப்படத்தை மாஸ்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.
அப்படத்தில் நடித்துள்ள ரியா ஜித்து, ‘செல்’ முருகன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
“சிங்கப்பூர் அழகான நாடு, மக்கள் அன்பானவர்கள். விமான நிலையத்தில் குடிநுழைவில்கூடத் தமிழைக் கண்டதில் மகிழ்ச்சியடைந்தேன். இங்கேயே குடியேறிவிடலாமா எனும் விருப்பம் எழுமளவு எனக்கு நெருக்கமான இடம் இது. சிங்கப்பூர் ரசிகர்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி,” என்றார் விஜய் ஆண்டனி.
இது அரசியல் சார்ந்த திரைப்படம் என்ற அவர், திரைப்படத்தின் கதாநாயகன் ‘கிட்டு’ ஒரு அரசியல் தரகர் என்றும் அவரைச் சுற்றி நடைபெறும் கதை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ஒரு சாதாரண மனிதன், சிக்கலான சூழலைச் சந்தித்து, அதனைக் கடந்து வருவது போன்ற படங்களில் நடித்துள்ளேன். இதிலும் கதாநாயகன் ஒரு சாதாரண மனிதன். ரசிகர்கள் என் படங்களில் எதிர்பார்க்கும் அனைத்தும் இதில் இருக்கும்,” என்று கூறினார் விஜய் ஆண்டனி.
“நான் நகைச்சுவை அல்லாத, சற்றே தீவிரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஏறத்தாழ கதாநாயகரின் உடன் பயணிக்கும் கதாபாத்திரம். இது மாறுபட்ட அனுபவமாக இருந்தது.” என்று ‘செல்’ முருகன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“விஜய் ஆண்டனி கடின உழைப்பாளர். மிகவும் பணிவானவர். அவருடன் நடித்ததில் பெருமை,” என்றார் நாயகி ரியா.
தமது திரைத்துறைப் பயணம், இசை உள்ளிட்டவை குறித்து தமிழ் முரசுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில், “திரைத்துறையின் எல்லாக் கலைகளையும் குறித்து தெரிந்துகொள்ளத் தொடங்கியதனாலேயே, நாம் கற்க வேண்டியது அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து கற்கிறேன். மேலும் சிறந்த படைப்புகளைக் கொடுக்க விரும்புகிறேன்,” என்று கூறினார் விஜய் ஆண்டனி.
கடந்த காலம், எதிர்காலம் எனத் தொடர்ந்து சிந்திக்காமல், இன்றைய, இப்போதைய நொடியை ரசித்து வாழ்வதே சிறந்தது என்பதைக் கற்றுக்கொண்டுள்ளதாகக் கூறிய அவர், ஒரே நேரத்தில் பல பணிகளை மேற்கொண்டாலும் அதனைச் சரியாகவும் நேர்த்தியாகவும் செய்துவிட்டு அடுத்த பணிக்கு நகர்வதாகச் சொன்னார்.
இசையிலும் எல்லா பாணியும் தமக்குப் பிடிக்கும் என்றும் தம் படைப்புகளுக்குத் தாமே முதல் பார்வையாளராக இருப்பதால் அதன் வெற்றி தோல்வி குறித்த தெளிவு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
“அருவி எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம். இயக்குநர் அருண் என்னை அணுகியபோதே, கரும்பு தின்னக் கூலியா என்பதுபோல உடனே ஒப்புக்கொண்டேன். படம் சிறப்பாக வந்துள்ளது. அனைவரும் கண்டு ரசிக்க வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டுள்ளார் விஜய் ஆண்டனி.

