சிங்கப்பூரில் புதிய செயற்கை நுண்ணறிவு ஆய்வு, புத்தாக்க நிலையம்

சிங்கப்பூரில் புதிய செயற்கை நுண்ணறிவு ஆய்வு, புத்தாக்க நிலையம்

2 mins read
f053a192-0cd4-4f04-83a9-531d6b6b7afb
செயற்கை நுன்ணறிவைப் பொறுத்தவரை, சிங்கப்பூரின் நீண்டகாலப் பங்காளியாக ஐபிஎம் திகழ்வதாக தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறினார். - படம்: சாவ்பாவ்

பசுமைக் கணினியியலும், செயற்கை நுன்ணறிவுப் பாதுகாப்பும் புதிய செயற்கை நுண்ணறிவு ஆய்வு, புத்தாக்க நிலையத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கணினியியல் கழகத்தில் 2025ஆம் ஆண்டுக்குள் அந்த நிலையம் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரிந்துரைக்கப்படும் நிலையம், அமெரிக்காவின் ‘ஐபிஎம்’ தொழில்நுட்ப நிறுவனத்துக்கும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான ஒரு கூட்டு முயற்சி.

‘ஐபிஎம்’ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு உள்ளமைப்பைப் பயன்படுத்தி இங்குள்ள அறிவியல் ஆய்வை மேம்படுத்துவதே நிலையத்தின் நோக்கம்.

‘சாண்ட்ஸ்’ எக்ஸ்போ, மாநாட்டு நிலையத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற்ற ‘ஐபிஎம் திங்க் 2024’ நிகழ்ச்சியில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ புதிய நிலையம் குறித்து அறிவித்தார்.

செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை, சிங்கப்பூரின் நீண்டகாலப் பங்காளியாக ‘ஐபிஎம்’ திகழ்வதாகத் திருவாட்டி டியோ கூறினார். அந்நிறுவனத்தின் பல முயற்சிகள் பொதுமக்களுக்குப் பயன் அளித்துள்ளதாக அவர் சொன்னார்.

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் பல்கலைக்கழக வளாகம் ஒன்றில் ‘ஐபிஎம்’ நிறுவனத்தின் முழுமையான செயற்கை நுண்ணறிவு உள்ளமைப்பு செயல்படுத்தப்படவிருப்பது இதுவே முதல் முறை.

அந்தச் செயற்கை நுண்ணறிவுக் கணினியின் உள்ளமைப்பு ‘ஐபிஎம்’ நிறுவனம் உருவாக்கிய தளங்களிலும் அந்நிறுவனத்தின் ‘ரெட் ஹேட்’ மேகக் கணினியின் தளத்திலும் செயல்படும்.

அரசாங்க அமைப்புகள், நிறுவனங்கள், கல்வி, ஆய்வுக் கழகங்கள் ஆகியவை, மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் புத்தாக்கமான செயற்கை நுண்ணறிவு ஆய்வுகளை மேற்கொள்ளலாம் என்று பல்கலைக்கழகமும் ‘ஐபிஎம்’ நிறுவனமும் தெரிவித்தன.

“இந்தக் கூட்டு முயற்சி பல்கலைக்கழகத்தின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவில் தொழில்நுட்ப மேம்பாட்டை ஊக்குவிக்கும். இதன் மூலம், சிக்கலான பணிகளைக் கையாள மேலும் சக்திவாய்ந்த, செயல்திறன்மிக்க, பலதிறன்வாய்ந்த செயற்கை நுன்ணறிவு முறைகள் உருவாகலாம்,” என்று அவை இரண்டும் கூறின.

செயற்கை நுண்ணறிவில் நம்பிக்கையை வளர்க்கும் நோக்கில், சாதனங்களையும் முறைகளையும் உருவாக்குவதில் ஒன்றிணைந்து செயல்பட அவை திட்டமிட்டுள்ளன.

‘ஐபிஎம்’ நிறுவனமும் தேசிய பல்கலைக்கழகமும் புதிய நிலையத்தில் முதலீடு செய்யப்படும் தொகை குறித்து தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்