கிட்டத்தட்ட 38,000 மின்சிகரெட்டுகளைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு

1 mins read
1673a0c2-9126-4205-b6f8-8d7625b94d88
துவாஸ் சோதனைச்சாவடிக்கு வந்த மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட லாரி ஒன்றில் 37,588 மின்சிகரெட்டுகளையும் அவற்றை மீண்டும் நிரப்புவதற்கான பொருள்களையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். - படம்: குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம்/ஃபேஸ்புக்

சிங்கப்பூருக்குள் சாதனை அளவாக மின்சிகரெட்டுகளைக் கடத்தும் முயற்சி ஆகஸ்ட் 21ஆம் தேதி துவாஸ் சோதனைச்சாவடியில் அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டது.

அச்சோதனைச்சாவடிக்கு வந்த மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட லாரி ஒன்றில் 37,588 மின்சிகரெட்டுகளையும் அவற்றை மீண்டும் நிரப்புவதற்கான பொருள்களையும் அதிகாரிகள் கண்டறிந்ததாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் புதன்கிழமை (அக்டோபர் 16) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

இவ்வாண்டு சிங்கப்பூரின் தரைவழி சோதனைச்சாவடிகளில் சிக்கிய ஆகப்பெரிய அளவிலான மின்சிகரெட்டுகள் இவை.

அந்த லாரி சோதிக்கப்பட்ட படங்களில் முறைகேடுகளைக் கண்டறிந்த அதிகாரிகள், அதைக் கூடுதல் சோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டனர். அதில், கள்ள மின்சிகரெட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணைக்காக இந்த வழக்கு சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மின்சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காக, அல்லது அவற்றை இங்கு பயன்படுத்தியதற்காக இவ்வாண்டின் முற்பாதியில் ஏறக்குறைய 5,480 பேர் பிடிபட்டனர்.

குறிப்புச் சொற்கள்