$440 பெறுமானமுள்ள அன்பளிப்பு அட்டைகளைக் கையாடியதாக அதிகாரி மீது குற்றச்சாட்டு

$440 பெறுமானமுள்ள அன்பளிப்பு அட்டைகளைக் கையாடியதாக அதிகாரி மீது குற்றச்சாட்டு

1 mins read
29da6671-0412-468a-a4d1-0034e62b069f
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 36 வயது லிங் யோங் ஷெங்கிற்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். - படம்: இணையம்

மொத்தம் $440 பெறுமானமுள்ள 22 அன்பளிப்பு அட்டைகளைக் கையாடியதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது நம்பிக்கை துரோகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்த அட்டைகளைத் தமது சொந்த விவகாரங்களுக்காக 36 வயது லிங் யோங் ஷெங் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இக்குற்றத்தை அவர் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் ஆகஸ்ட் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பிரானி வேயில் உள்ள ஆணையத்தின் கடல்வழிச் சோதனைச்சாவடித் தலைமையகத்தில் புரிந்ததாக நம்பப்படுகிறது.

சில அன்பளிப்பு அட்டைகள் கையாடப்பட்டதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, அதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் ஆணையம் ஜூலை 26ஆம் தேதியன்று கூறியது.

சந்தேகப் பேர்வழி அடையாளம் காணப்பட்டதை அடுத்து, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

“ஆணையத்தின் அதிகாரிகள் உயர் தர நேர்மையையும் நிபுணத்துவத்தையும் கொண்டிருப்பவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இல்லாத அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆணையம் ஒருபோதும் தயங்காது,” என்று ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

செப்டம்பர் 6ஆம் தேதியன்று லிங் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்