ஓட்டுநர்களிடம் சுவாசப் பரிசோதனைகளை மேற்கொள்ளக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய (ஐசிஏ) அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) முதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
நில, கடற்பகுதிச் சோதனைச்சாவடிகளிலும் அவற்றின் சுற்றுவட்டாரங்களிலும் ஓட்டுநர்கள் சோதிக்கப்படக்கூடும். கடற்பகுதிச் சோதனைச்சாவடிகள் என்பது கடல்வழியாகக் கொண்டுசெல்லப்படும் சரக்குகளை நிலத்தில் சோதிப்பதைக் குறிக்கும். சரக்குகளை ஏற்றிச்செல்லும் ஓட்டுநர்கள் அல்லது வாகனம் ஓட்டுவோரை அதிகாரிகள் சோதிக்கக்கூடும். பரிசோதனையில் தோல்வியுறுவோர் அடுத்த கட்ட நடவடிக்கைக்காகக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவர்.
வாகனம் ஓட்டுவோர் சுவாசப் பரிசோதனைக்கு உட்பட மறுப்பது குற்றம். முதன்முறை குற்றம் புரிவோருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையோ $5,000 வரை அபராதமோ விதிக்கப்படக்கூடும். மீண்டும் மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்வோருக்கு அதிகபட்சம் ஓராண்டுச் சிறைத்தண்டனையும் $10,000 அபராதமும் விதிக்கப்படக்கூடும்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கட்டிக்காக்கவும் நில, கடற்பகுதிச் சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் புதிய அதிகாரம் ஆணைய அதிகாரிகளுக்குக் கைகொடுக்கும் என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது. இந்த ஆண்டு (2025) ஜனவரியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாலைப் போக்குவரத்துச் சட்டத் திருத்தங்களின் ஒரு பகுதியாகப் புதிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.