குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையத்தின் (ஐசிஏ) சேவை நிலையம் இவ்வாண்டு செப்டம்பர் 2ஆம் தேதியிலிருந்து சனிக்கிழமைகளில் செயல்படாது.
லெவண்டர் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள அந்நிலையம், இப்போது சனிக்கிழமைகளில் அரைநாள் மட்டும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், சனிக்கிழமைகளில் அந்நிலையத்திற்கு வருகைதருவோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதை அடுத்து, செப்டம்பர் மாதத்திலிருந்து இனி வாரத்திற்கு ஐந்து நாள்கள் மட்டும் செயல்படும் என்று ஐசிஏ வியாழக்கிழமை (ஜூலை 25) தெரிவித்தது.
அதாவது, பொது விடுமுறை நாள்கள் தவிர்த்து, வார நாள்களில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமைவரை காலை 8 மணியிலிருந்து மாலை 4.30 மணிவரை அந்நிலையம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 - 2023ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சனிக்கிழமைகளில் அந்நிலையத்திற்கு வருவோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50 விழுக்காடு குறைந்துவிட்டது.
மாறாக, இணையம் வழியாக அந்நிலையத்தின் சேவைகளை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்போது, கிட்டத்தட்ட 95 விழுக்காட்டினர் இணையம் வழியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கின்றனர்.
கடந்த 2022 மே மாதத்திலிருந்து பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களையும் இணையம் வழியாகப் பெற முடிகிறது. 2023 பிப்ரவரி முதல் நீண்டகால விசாக்களும் இணையம் வழியாக வழங்கப்பட்டு வருகின்றன.
கடப்பிதழ் மற்றும் அடையாள அட்டைகளை மட்டும் நேரடியாகச் சென்று பெற வேண்டியுள்ளது. குறிப்பிட்ட சிங்போஸ்ட் கிளைகளுக்குச் சென்று அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
அவ்வகையில், இப்போது ஏறக்குறைய 70% கடப்பிதழ்களும் அடையாள அட்டைகளும் சிங்போஸ்ட் நிலையங்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. அந்தக் குறிப்பிட்ட சிங்போஸ்ட் நிலையங்கள் எல்லா சனிக்கிழமைகளிலும், அவற்றுள் சில ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறந்திருக்கும் என ஆணையம் கூறியது.

