குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய (ஐசிஏ) அதிகாரிகள் அல்லது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் போன்று நடித்துப் பணம் கேட்கும் மோசடிக்காரர்கள் குறித்து கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதுகுறித்து ஆணையம் புதன்கிழமை (ஜூன் 10) அறிக்கையொன்றை வெளியிட்டது. இவ்வாண்டு ஜனவரியிலிருந்து இரண்டு வகையான மோசடிகள் பற்றிப் பொதுமக்களிடமிருந்து புகார்கள் கிடைத்திருப்பதாக அது கூறியது.
முதல் வகையில், ஆணையத்தின் அதிகாரிகளைப் போன்று வேடமிட்டு மோசடிக்காரர்கள் தொலைபேசி அல்லது காணொளியில் தொடர்புகொள்வார்கள்.
மோசடிக்காரர்கள், தங்களை உண்மையானவர்களைப் போன்று காட்டிக்கொள்வதற்காக ஆணையத்தின் சின்னத்தை அவர்களின் படங்களில் பயன்படுத்துவார்கள் அல்லது சீருடையை அணிந்திருப்பார்கள் என்று ‘ஐசிஏ’ தெரிவித்தது.
அத்தகைய அழைப்புகள் தங்களிடமிருந்து வரவில்லை என்பதை ஆணையம் தெளிவுபடுத்தியது.
இரண்டாம் வகையில், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது நெருங்கியவர்களைப் போன்று மோசடிக்காரர்கள் நடிப்பார்கள். ஆணையத்தால் சம்பந்தப்பட்டவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் பொய்சொல்வார்கள்.
மோசடிக்காரர்கள், ஆணையத்தின் சின்னத்தைக் கொண்ட போலி ஆவணங்களையும் அதிகாரிகளின் போலிக் கையெழுத்துகளையும் காட்டக்கூடும் என்று ஐசிஏ தெரிவித்தது.
வங்கிக் கணக்கிற்குள் நுழைவதற்கான விவரங்களையோ அதிகாரபூர்வமற்ற தளங்களிலிருந்து கைப்பேசிச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யுமாறோ ஐசிஏ அதிகாரிகள் கேட்கமாட்டார்கள் என்று ஆணையம் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஆணையத்தின் அதிகாரிகள் ஒருபோதும் வங்கிப் பரிமாற்றத்தின்மூலம் அபராதம் அல்லது கட்டணம் செலுத்துமாறு கோரமாட்டார்கள்; அத்துடன் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவோரை விடுவிப்பதற்காகப் பணம் கேட்கவும் மாட்டார்கள் என்று ஆணையம் தெரிவித்தது.
அதிகாரிகள், தொலைபேசி அழைப்புகளைக் காவல்துறையினருக்கு மாற்றிவிடமாட்டார்கள் என்றும் அது சொன்னது.
சென்ற ஆண்டில் 37,300க்கும் மேற்பட்ட மோசடிச் சம்பவங்களில் பொதுமக்கள் 900 மில்லியன் வெள்ளிக்கும் மேல் இழந்தனர்.
பொதுமக்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டதாகச் சந்தேகப்பட்டால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் என்று ஐசிஏ கூறியது.
மோசடிச் சம்பவம் குறித்து மேல் விவரங்களை அறிய விரும்புவோர், ‘ஸ்கேம்ஷீல்டு’ உதவி எண்ணை அழைக்கலாம். தொலைபேசி எண்: 1799.
அல்லது இணையத்தளத்திற்குச் செல்லலாம். இணைய முகவரி: scamshield.gov.sg

