ஆசிய-பசிபிக் வட்டார சிவில் விமானப் போக்குவரத்துத் துறை, 2024ஆம் ஆண்டின் முற்பாதியில், கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலுக்கு முந்தைய நிலைக்கு மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தலைமைச் செயலாளர் ஹுவான் கார்லோஸ் சலாசார் அவ்வாறு கூறினார்.
உள்நாட்டுக் கொள்கை போன்ற சில காரணங்களால் சில நாடுகள் தங்கள் சந்தைகளை மெதுவாகவே திறந்தன. ஆசிய-பசிபிக் வட்டார விமானப் போக்குவரத்து மீட்சியடைய கூடுதல் காலம் பிடிப்பதற்கு இதுவே காரணம் என்றார் திரு சலாசார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
நீடித்த நிலைத்தன்மை மிக்க விமான எரிபொருளைப் பயன்படுத்தும் வாய்ப்பு ஆசிய-பசிபிக் வட்டாரத்திற்கு மிக அதிகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், விலங்குகளின் கொழுப்புகள் போன்ற கழிவுப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் விமான எரிபொருளை அவர் சுட்டினார்.
இத்தகைய எரிபொருள் விமானப் போக்குவரத்தினால் ஏற்படும் கரிம வெளியேற்றத்தை கிட்டத்தட்ட 65 விழுக்காடு குறைக்க உதவும் என்றார் திரு சலாசார்.

