சிங்கப்பூரில் ஐசிசி வர்த்தக அமைப்பின் உலகளாவிய இயக்கம்

2 mins read
032ecb7d-b07a-45fa-a01a-722bc2353db9
ஐசிசி தலைமைச் செயலாளர் ஜான் டென்டன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஐசிசி எனப்படும் அனைத்துலக வர்த்தகத் தொழிற்சபை முக்கிய உலகளாவிய இயக்கம் ஒன்றை சிங்கப்பூரில் தொடங்கியுள்ளது.

தற்போதைய தெளிவற்ற சூழலில் விதிமுறைகளை மையமாகக் கொண்டு இயங்கும் வர்த்தக முறை பாதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் புத்துயிர் அளிப்பது இந்த இயக்கத்தின் இலக்காகும்.

இதுகுறித்து ஐசிசி, லீ குவான் யூ பொதுக் கொள்கைப் பள்ளி ஆகியவை இணைந்து நடத்திய வட்ட மேசைச் சந்திப்பில் கலந்துபேசப்பட்டது.

இதுபற்றி ‘தி சிங்கப்பூர் எடி‌ஷன்’ (The Singapore Edition) ஹோட்டலில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய ஐசிசி தலைமைச் செயலாளர் ஜான் டென்டன், ஆசியான் தரப்பிடமிருந்து இந்த இயக்கத்துக்கு அமோகமான வரவேற்பு இருப்பதாக வியாழக்கிழமை (அக்டோபர் 23) தெரிவித்தார்.

ஆசியான் நாடுகளின் அரசாங்க அதிகாரிகள், ஆசியான் வர்த்தக ஆலோசனை மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஆசியான் தரப்பினரில் அடங்குவர்.

உலக வர்த்தகத் தலைமைத்துவப் பொறுப்பிலிருந்து அமெரிக்கா விலகி வருவதால் வெற்றிடம் உருவாகியுள்ள இவ்வேளையில் இந்த இயக்கம் தொடங்கப்படுகிறது.

“இதனால் பெரிய அளவில் தெளிவின்றி இருக்கிறது. அமெரிக்க வரிவிதிப்பையும் தாண்டி இதுவே வர்த்தகங்களுக்கு ஆகப் பெரிய கவலையாக இருந்து வருகிறது,” என்றார் திரு டென்டன்.

“வரிவிதிப்பு சவாலாக இருக்கிறது. அதேவேளை, இந்தத் தெளிவற்ற நிலவரம்தான் உலக அளவில் பல நிறுவனங்கள் முதலீடு செய்வதைத் தள்ளிப்போடுவதற்கு ஆக முக்கியமான காரணமாக இருக்கிறது,” என்று அவர் விவரித்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் செயல்படும் ஐசிசி, 170 நாடுகளைச் சேர்ந்த 45 மில்லியன் வர்த்தகங்களைப் பிரதிநிதிக்கிறது. பெரிய, சிறிய வர்த்தகங்கள் அவற்றில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்