தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனிநபர் தரவான அடையாள அட்டை எண்களை பரவலாகப் பயன்படுத்தக்கூடாது

2 mins read
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ
e6dfd5ba-4d8a-4947-b790-5c0aba02fb03
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, மக்களின் கவலைகளை அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தனிநபர் ஒருவரின் முக்கிய அடையாளமாக இருக்கும் தேசிய அடையாள அட்டை எண் தொடர்ந்து தனிப்பட்டவரின் தரவுகளாக நீடிக்கும். தேவைப்படும்போது மட்டுமே அவற்றைப் பெற்று பயன்படுத்த வேண்டும் என்று புதன்கிழமை (ஜனவரி 8) நாடாளுமன்றத்தில் பேசிய தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டை எண்களை சேகரிக்கும் நிறுவனங்களுக்கு அவற்றைப் பராமரிக்க வேண்டிய கடமை உள்ளது. மேலும் தரவைப் பயன்படுத்துவதைப் பற்றி முறையாக தெரிவித்து ஒப்புதலைப் பெற வேண்டும், அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று அடையாள அட்டை எண்கள் வெளியான விவகாரம் தொடர்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.

“இவை தற்போதுள்ள வழிகாட்டி, அவை மாறாது,” என்று அவர் குறிப்பிட்டார்.

டிசம்பர் 9ஆம் தேதி புதிய பிஸ்ஃபைல் இணையத் தளம் தொடங்கப்பட்டபோது அதில் உள்ள பொதுத்தேடல் செயல்பாட்டின் மூலம் சில சிங்கப்பூரர்களின் அடையாள அட்டை எண்களை வெளிப்படையாக பார்க்க முடிந்தது. இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து டிசம்பர் 13ஆம் தேதி அந்தத் தேடல் வசதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

பொதுமக்களின் கவலையைப் புரிந்துகொள்வதாக அமைச்சர் டியோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“அண்மைய பிஸ்ஃபைல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது, வேண்டுமென்றே செய்யப்பட்டது அல்ல,” என்று அவர் விளக்கினார்.

அரசாங்கம், அடையாள அட்டை எண்களை முழுமையாகக் காட்டுவதை அனுமதிப்பதற்கான கொள்கையை மாற்றியிருப்பதாகவும் பொதுமக்கள் நம்பினர்.

ஆனால் அப்படியல்ல என்றார் அமைச்சர் டியோ.

“பொதுமக்கள் அக்கறையையும் கவலையையும் நாங்கள் முக்கியமானதாகக் கருதுகிறோம். அவர்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்திய தவற்றுக்காக மிகவும் வருந்துகிறோம்.” என்று அவர் தெரிவித்தார்.

அடையாள அட்டை எண்களை மறைக்கும் நடைமுறையை நிறுத்தும் திட்டத்தின் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்றும் அந்த எண் இன்னும் ரகசியமாகக் கருதப்படுகிறதா என்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த விவகாரத்தில் தனியார் நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும், தனியார் நிறுவனங்கள் அடையாள அட்டை எண்களை தவறாகக் கையாள்வது இன்னமும் தரவு மீறலாகக் கருதப்படுகிறதா எனவும் மற்ற உறுப்பினர்களும் கேட்டனர்.

குறிப்புச் சொற்கள்