நடந்து முடிந்த தேர்தலில் அடையாள அரசியல் முக்கிய இடம் பிடித்து இருந்ததாகவும் அது சிங்கப்பூர் அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டிய ஒரு விவகாரம் என்றும் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தெரிவித்து உள்ளார்.
அடையாள அரசியல் என்பது, எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய, சிறப்பாகச் செயல்படக்கூடிய நாட்டின் பல இன, பல சமய சமூகத்திற்கு எதிரானது என்றார் அவர்.
“நாம் ஒருவருக்கு ஒருவர் பக்கபலமாக வாழ்கிறோம். ஒன்றாக இணைந்து பள்ளிக்குச் செல்கிறோம். ஒரே மக்களாக இணைந்து இருப்பதால் நமக்கு பல வாய்ப்புகள் கிடைக்கின்றன. எனவே, ஒற்றுமையே நமது பலத்தின் அடிப்படை,” என்று திரு டியோ குறிப்பிட்டு உள்ளார்.
உள்துறை அமைச்சு கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை (மே 20) அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“அண்மைய தேர்தலின்போது அடையாள அரசியலும் உள்ளூர் அரசியலுக்குள் இழுக்கப்பட்ட வெளிப்புற பிரச்சினைகளும் சில கட்சிகளின் அரசியல் திட்டங்களில் இடம்பெற்று இருந்தன.
“தாங்கள் அரசியலில் நுழைவதன் பின்னணியில் அது ஊக்க காரணியாக இருந்தது என்று சில வேட்பாளர்களே கூறினர்.
“சிங்கப்பூர் அரசியலுக்குள் வெளிநாட்டுத் தலையீட்டிற்கான முயற்சிகள் இருந்ததையும் நாம் கண்டோம். சிங்கப்பூருக்குள்ளேயே சில அரசியல் கட்சிகள் அதுபோன்ற தலையீட்டைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதை உணர்ந்தே வெளிநாட்டினர் அவ்வாறு செய்தார்கள்,” என்று மூத்த அமைச்சர் டியோ விளக்கினார்.
மே 3ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்னர் பிரதமர் லாரன்ஸ் வோங் செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
அப்போது அவர், அடையாள அரசியலுக்கு சிங்கப்பூரில் இடமில்லை, சமயமும் அரசியலும் ஒன்றுகலக்கக்கூடாது ஆகிய இரு அடிப்படைக் கொள்கைளின் மீதான தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துமாறு எல்லா அரசியல் கட்சிகளையும் கேட்டுக்கொண்டார்.
இரு மலேசிய அரசியல்வாதிகளும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இதற்கு முன்னர் தடுத்து வைக்கப்பட்ட ஒருவரும் தேர்தலில் தலையிடும் முயற்சியாக ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவுகளை சிங்கப்பூர் அரசாங்கம் தடுத்து நிறுத்தியதற்கு மறுநாள் பிரதமர் வோங் அவ்வாறு தெரிவித்து இருந்தார்.
அந்தத் தலையீடு குறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் விளக்கிய திரு டியோ, நல்ல வேளையாக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை சிங்கப்பூரர்கள் கண்டதாகவும் அதனால் அடையாள அரசியல் எடுபடவில்லை என்றும் குறிப்பிட்டார்.
“இனம், சமயம் அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்துவது மிகவும் சுலபம் என்பதால் அந்த விவகாரத்தை மிகவும் கவனத்துடன் கையாண்டோம்.
“ஒற்றுமை, நல்லிணக்கம், ஒருமித்த கருத்து போன்றவற்றை உருவாக்குவது மிகவும் கடினமான செயல். அதேவேளை, ஒரே சமூகம் என்ற உணர்வு சிதைக்கப்பட்டால் நல்லிணக்கத்தை மீண்டும் கட்டி எழுப்புவது அதைவிடக் கடினமானது. எனவே நாம் இந்த விவகாரத்தில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டி உள்ளது,” என்றார் திரு டியோ.

