மனைவியுடன் ஜப்பான் சுற்றுப்பயணம் சென்ற சிங்கப்பூரர் ஒருவரின் அடையாளங்கள் திருடப்பட்டதால், செலவுக்குப் பணமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது.
மெல்வின் சான், 35, எனப்படும் அவரும் அவரது மனைவியும் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ‘தோக்கியோ டிஸ்னிசீ’ (Tokyo DisneySea) பொழுதுபோக்குத் தலத்தில் இருந்தபோது அவர்களின் கடன்பற்று அட்டைகளும் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதை உணர்ந்தனர்.
உடனடியாக சிங்கப்பூரின் டிபிஎஸ், யுஓபி மற்றும் ஓசிபிசி வங்கிகளைத் தொடர்புகொண்டு பேச அவர்களுக்கு மூன்று மணி நேரமானதுடன் வெளிநாட்டிலிருந்து அழைப்புகள் செய்யப்பட்டதால் $200 செலவு ஆனது.
மர்ம நபர்கள் தமது அடையாளங்களைப் பயன்படுத்தி, வங்கிகளைத் தொடர்புகொண்டு, கடன்பற்று அட்டைகளை ரத்து செய்ததோடு கணக்குகளை முடக்கிய விவரத்தை வங்கிகளிடம் இருந்து தெரிந்துகொண்டனர்.
அந்தச் சம்பவத்தால் தமக்கு இழப்பு எதுவும் ஏற்படாவிட்டாலும், வாடிக்கையாளரின் பணத்தை மோசடிக்காரர்களிடம் இருந்து பாதுகாக்க வங்கிகளுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளதை அது உணர்த்தியதாக திரு சான் கூறினார்.
இது தொடர்பாக தங்களிடம் புகார் செய்யப்பட்டு உள்ளதாகவும் அதுகுறித்து கவனித்து வருவதாகவும் காவல்துறை கூறியது.

