அமெரிக்கா, சீனா மோதாவிடில் சிங்கப்பூர் செழிக்க இடம் உள்ளது: பிரதமர் வோங்

அமெரிக்கா, சீனா மோதாவிடில் சிங்கப்பூர் செழிக்க இடம் உள்ளது: பிரதமர் வோங்

படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

21 Nov 2026 - 9:46 pm

2 mins read

அமெரிக்காவும் சீனாவும் ஒன்றுடன் ஒன்று மோதலில் ஈடுபடாத வரை, சிங்கப்பூர் செழித்து வளர்வதற்கான இடம் இருக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் சனிக்கிழமை (நவம்பர் 21) தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) உச்சநிலை மாநாட்டில் பங்கேற்ற பிறகு, பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். மாநாட்டிற்கிடையே, மாநாட்டை ஏற்று நடத்திய சீன அதிபர் ஸி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உள்ளிட்ட பல உலகத் தலைவர்களுடன் பிரதமர் வோங் பேசினார்.

“சிங்கப்பூரைப் பொறுத்தவரை, இரு தரப்புடனும் நட்புடன் இருக்கவும், இரு தரப்புடனும் வணிகம் செய்யவுமே நாங்கள் விரும்புகிறோம்,” என்றார் அவர்.

பிலிப்பீன்சின் மணிலாவில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டிலும், ஷென்சென் மாநாட்டிலும் அதிபர் டிரம்ப், அதிபர் ஸி ஆகிய இருவருடனும் மிகச் சிறந்த சந்திப்புகளை நடத்தியதாகப் பிரதமர் வோங் பகிர்ந்துகொண்டார்.

“சிங்கப்பூரின் நிலைப்பாட்டை இருவரும் புரிந்துகொண்டுள்ளனர். இரு வல்லரசுகளும் மோதாத வரை, இச்சிக்கலான சூழலைக் கையாண்டு, அவ்விரு நாடுகள் உட்பட உலக நாடுகளுடனும் வணிகம் செய்து சிங்கப்பூர் நன்றாக வாழ முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க-சீனப் போட்டியின் கண்ணோட்டத்தில் மட்டுமே எல்லா முடிவுகளையும் பார்க்கத் தேவையில்லை என்றும், 2027ல் சிங்கப்பூர் ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்கும்போது, பிற நாடுகளுடன் இணைந்து செயல்படப் பல வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் சொன்னார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவின் 50வது ஆண்டு நிறைவையொட்டி ஆசியான்-ஐரோப்பிய ஒன்றிய உச்சநிலை மாநாடு, தடையற்ற வர்த்தக உடன்பாடு, ஆசியான்-கனடா மாநாடு, உடன்பாடு ஆகியவற்றுக்கான சாத்தியக்கூறுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இவை வெவ்வேறு வட்டாரங்கள், வெவ்வேறு நாடுகள். ஆனால் இவை அனைத்தும் சிங்கப்பூர், தென்கிழக்கு ஆசியாவுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்த ஆர்வமாக உள்ளன. அடுத்த ஆண்டு சிங்கப்பூர் ஆசியான் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்கும்போது, அதற்கான சிறந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்றும் சொன்னார் பிரதமர் வோங்.

குறிப்புச் சொற்கள்
லாரன்ஸ் வோங்ஆசியான்உச்சநிலை மாநாடுசீனாஅமெரிக்கா