சிறார் பாலியல் துன்புறுத்தல் மறைக்கப்பட்டால் அவை பல்லாண்டுகள் வெளிவராமல் போகலாம்: சண்முகம்

சிறார் பாலியல் துன்புறுத்தல் மறைக்கப்பட்டால் அவை பல்லாண்டுகள் வெளிவராமல் போகலாம்: சண்முகம்

குடும்பங்கள் அதுபற்றித் தெரியப்படுத்தாதது பற்றி அமைச்சர் சண்முகம் பேசினார்
படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

07 Oct 2026 - 8:55 pm

2 mins read

https://www.straitstimes.com/singapore/politics/when-families-cover-up-sexual-abuse-of-a-child-it-can-remain-hidden-for-years-shanmugam

கடந்த 2021லிருந்து 2025ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறரின் பராமரிப்பின்கீழ் உள்ள சிறார் துன்புறுத்தலுக்கு ஆளான 36 சம்பவங்கள் பதிவாயின.

சம்பந்தப்பட்ட சிறாரைப் பிறர் துன்புறுத்த அனுமதித்து அது நீதிமன்ற வழக்கு வரை சென்ற சம்பவங்களும் அவற்றில் அடங்கும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறார் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளத் தவறியதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட குடும்பத்தார் சம்பந்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மூத்த அமைச்சர் கா. சண்முகம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) பதிலளித்தார்.

சிறுவர் மற்றும் இள வயதினர் சட்டம், சட்டப் பிரிவு ஆறின்கீழ் அந்த 36 வழக்குகளில் நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டது. அச்சட்டத்தின்படி சிறார் அல்லது இளையருக்குப் பொறுப்பு வகிக்கும் அல்லது கவனிக்கும் ஒருவர் அந்தப் பிள்ளையையோ இளையரையோ துன்புறுத்தக்கூடாது அல்லது பிறர் அவ்வாறு செய்ய வழிவிடவோ அனுமதிக்கவோ கூடாது.

பாலியல் துன்புறுத்தல்

இதில் பாலியல் துன்புறுத்தலும் அடங்கும். ஒரு பிள்ளை அல்லது இளையர் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்படுவதற்கு ஒருவர் தெரிந்தே வழிவிடும்போது காவல்துறை அதுபோன்ற சம்பவங்களைத் தனியாக கண்காணிக்காது என்று திரு சண்முகம் விளக்கினார்.

“குடும்பத்தார் அல்லது சம்பந்தப்பட்ட வீட்டில் வசிப்பவர்கள் சிறார் பாலியல் துன்புறுத்தலை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் அந்தக் குற்றத்தை அடையாளம் காண்பது சிரமமாகும். அதைத் தொடர்ந்து அந்தப் பாலியல் துன்புறுத்தல் பல ஆண்டுகளாக வெளிவராமலே இருக்கக்கூடும்.

“பல நாடுகளில் இது அடிக்கடி நடக்கும் ஒன்றாக இருந்துவருகிறது,” என்று உள்துறை அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சண்முகம் விவரித்தார்.

தனது இளைய மகளை மகன் பல ஆண்டுகளாகப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியதை மறைத்த 45 வயது தாய்க்கு 2024ஆம் ஆண்டு நான்காண்டுகள் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரின் மகன், தனது இளைய சகோதரிக்கு ஐந்து வயதானதிலிருந்தே பாலியல்ரீதியாகத் துன்புறுத்திவந்தார்.

தங்கையைவிட எட்டு வயது மூத்தவரான மகனுக்கு 11.5 ஆண்டுகள் சிறைத்தன்டனையும் ஏழுப் பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

சேஃபர் திட்டம்

இதன் தொடர்பில் சிறார் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க சேஃபர் (SAFER) எனப்படும் நடவடிக்கைத் திட்டத்தை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு கடந்த செப்டம்பர் மாதம் அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. சேஃபர் மூலம் சிறார்கள் பாதுகாக்கப்படுவதன் தொடர்பிலான கவலை உள்ள குடும்பங்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டு சிறார் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை மேலும் நன்கு அடையாளம் கண்டு தடுப்பது இலக்காகும்.

சட்ட அமலாக்க அமைப்புகள் உள்ளிட்ட அமைப்புகளிடம் இருக்கும் அதுபோன்ற குடும்பங்களின் தகவல்கள் இந்நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்