‘கேபோட்’ பயன்படுத்துபவர்களை அடையாளம் கண்டால் மருத்துவர்கள் உடனடியாகப் புகாரளிக்கவேண்டும்

2 mins read
34c5060b-97f5-47cf-bca3-67b006eaffeb
‘கேபோட்’ மின்சிகரெட்டுகளைப் புகைப்பவர்கள் அதிலிருந்து வெளிவர QuitVape நடவடிக்கையில் இணையலாம்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் எட்டோமிடேட் (etomidate), பிரிவு ‘சி’யில் உள்ள போதைப்பொருளாக வகைப் படுத்தப்பட்டுள்ளது.

அதனால் அனைத்து மருத்துவர்களும் ‘கேபோட்’ பயன்படுத்துபவர்களை அடையாளம் கண்டால் அவர்கள்குறித்து ஏழு நாள்களுக்குள் தகுந்த அதிகாரிகளிடம் புகாரளிக்கவேண்டும்.

மருத்துவர்கள் புகாரளித்த பிறகு அதிகாரிகள் சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்துவார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படும்.

சந்தேக நபர்களைச் சுகாதார அமைச்சு அல்லது மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளிடம் மருத்துவர்கள் புகார் அளிக்கவேண்டும். மருத்துவர்கள் சந்தேக நபர்களின் பெயர், வயது, முகவரி மற்றும் அடையாள எண்ணை வழங்கவேண்டும்.

மேலும் சந்தேக நபர் எத்தனை முறை அந்த மருத்துவரை அணுகியுள்ளார், மருத்துவர் அவருக்கு என்னென்ன மருந்துகளை வழங்கினார், சந்தேக நபரிடம் ஏதேனும் உடல்ரீதியான அறிகுறிகள் தென்பட்டதா போன்ற விவரங்களையும் மருத்துவர் அதிகாரிகளிடம் வழங்கவேண்டும்.

‘கேபோட்’ மின்சிகரெட்டுகளைப் புகைப்பவர்கள் தடுமாற்றத்துடன் இருப்பார்கள் அல்லது பேசும்போது உளறுவார்கள்.

‘கேபோட்’ மின்சிகரெட்டுகளைப் புகைப்பவர்கள் அதிலிருந்து வெளிவர QuitVape நடவடிக்கையில் இணையலாம். தானாக முன்வந்து சேர்பவர்களுக்கு எந்தத் தண்டனையும் இல்லை.

ஆனால் மருத்துவர்கள், அதிகாரிகளிடம் ‘கேபோட்’ பயன்படுத்துபவர்கள் சிக்கினால் அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

சிங்கப்பூரில் மின்சிகரெட் புகைப்பதை எதிர்கொள்ளும் விதமாக, செப்டம்பர் 1ஆம் தேதி முதல், ‘எட்டோமிடேட்’ விநியோகிப்பாளர்களுக்கு அதிகபட்சமாக 15 பிரம்படிகளும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

18 வயதுக்குட்பட்டவர்கள் முதல்முறையாக ‘எட்டோமிடேட்’ பயன்படுத்தினால் $500 அபராதமும் பெரியவர்களுக்கு $700 அபராதமும் விதிக்கப்படும். மேலும், அவர்கள் ஆறு மாதங்கள் வரை கட்டாய மறுவாழ்வுத் திட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும்.

இரண்டாவது முறையாக ‘எட்டோமிடேட்’ பயன்படுத்தினால் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள், ஆறு மாதங்கள் கட்டாய மறுவாழ்வுத் திட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும். அவர்களிடம் மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்படும்.

மூன்றாவது முறையாக ‘எட்டோமிடேட்’ பயன்படுத்தினால் அவர்கள் 12 மாதங்கள் கண்காணிக்கப்படுவார்கள், 12 மாதங்கள் மறுவாழ்வு நிலையத்தில் இருக்கவேண்டும். அவர்களிடம் மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்