பள்ளிகளில் பகடிவதைச் சம்பவங்கள் நிகழும்போது சம்பந்தப்பட்டவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பிரச்சினையை நிதானமாகக் கையாளும் உத்தியைக் கல்வி அமைச்சு விரும்புவதாக கல்வி இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் வியாழக்கிழமை (மார்ச் 7) கூறினார்.
இருப்பினும், பகடிவதைச் சம்பவங்கள் பற்றி இணையத்தில் பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டால் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நியாயமான வகையில் நடந்துகொள்ளும் நோக்குடன் கல்வி அமைச்சு உண்மையைத் தெரிவித்து தெளிவுபடுத்தக்கூடும் என்றார் அவர்.
அண்மையில் மொன்ட்ஃபர்ட் உயர்நிலைப்பள்ளியில் நிகழ்ந்த பகடிவதைச் சம்பவம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு டாக்டர் மாலிக்கி நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.
“பகடிவதைச் சம்பவத்துடன் மாணவர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து, திருந்த கல்வி அமைச்சும் பள்ளிகளும் வாய்ப்பு அளிக்க விரும்புகின்றன. அதற்கான சூழலை அமைத்துத் தரும் உத்தியை கடைப்பிடிக்கிறோம்.
“இருப்பினும், பள்ளியில் நிகழும் பகடிவதைச் சம்பவங்கள் பற்றி இணையத்தில் கருத்துரைக்கப்பட்டால், அதிலும் பொய்ச் செய்தி பரப்பப்பட்டால், எதிர்தரப்பினரை இழிவுபடுத்தினால், முற்றிலும் தவறு செய்தவராகவோ, செய்யாதவராகவோ இருந்தும் தம்மை நியாயப்படுத்திக்கொள்ள ஒருதலைப்பட்சமான கருத்துகளைப் பதிவிட்டால் நடந்த உண்மைகளை கல்வி அமைச்சு முன்வைக்கக்கூடும். பள்ளி நடத்திய விசாரணை மூலம் கிடைத்தத் தகவல்களைக் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று டாக்டர் மாலிக்கி கூறினார்.

