செயற்கை நுண்ணறிவு என்பதை எல்லாத் துறையினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அண்மை வரவுசெலவுத் திட்டம் வலியுறுத்தியுள்ளதாகக் கட்டட வசதி நிர்வாக, துப்புரவுச் சேவை வழங்கும் சிறிய, நடுத்தர நிறுவனத்தின் உரிமையாளர் சக்திவேலன் நடராஜா தெரிவித்துள்ளார்.
“செயற்கை நுண்ணறிவு என்பது தொழில்நுட்ப விவகாரம் மட்டுமன்று; பொருளியல், ஊழியரணி ஆகியவற்றுக்கான கொள்கைகளுடன் அது ஒன்றிணைந்துள்ளது,” என்று திரு சக்திவேலன் கூறினார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப முறைகளின் பரவல் வெவ்வேறு துறைகளில் வெவ்வேறு வேகங்களில் இருந்தாலும் நிறுவனங்கள் போட்டித்தன்மையுடன் திகழ்வதற்கு அது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
முதியோருக்கான வேலை மறுவடிவமைப்புக் குறித்துப் பிரதமர் பேசியதைச் சுட்டிய திரு சக்திவேல், அதற்கும் செயற்கை நுண்ணறிவு உதவும் எனக் கூறினார்.
தரநிலைகளைச் சோதிக்கும் மேற்பார்வையாளர்கள், தரவு நிபுணர்கள் போன்ற வேலைகளை முதியோர் செய்யலாம் என்ற யோசனையை அவர் முன்வைத்தார்.
இருந்தபோதும் துப்புரவுத் துறையில் எந்திரங்களை மனிதர்கள் நேரடியாக இயக்கும் காலம் மலையேறக்கூடும் என்று திரு சக்திவேலன் கூறினார். மனிதவளப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் துப்புரவுத் தொழிலுக்கு இது நன்மையே என்பது அவரின் நிலைப்பாடு.
ஆறு மாதங்களுக்குச் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பிரீமியம் கருவிகளை இலவசமாகப் பயன்படுத்த வரவுசெலவுத் திட்டம் உதவும் என்பது, தம் வர்த்தகத்திற்கு உடனடி நன்மை பயக்கும் என்று அவர் கூறுகிறார்.
நிறுவனங்கள் விதிமுறைகளுக்கு உட்படுவதை உறுதிசெய்கின்ற அறிக்கைகளும் தானியக்க முறையில் தயாரிக்கப்படும் என நம்புவதாக அவர் தெரிவித்தார். அதற்கு ஏற்ற வகையில் மனிதவளத்திற்கான பயிற்சி, நடைமுறைக்கு உகந்ததாகத் திட்டமிடப்பட வேண்டும் என்பது அவரது விருப்பம்.
தொடர்புடைய செய்திகள்
ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி சரியாகவும் தங்கள் பணிக்குப் பொருத்தமாகவும் இருக்கவேண்டும் என்பதைத் திரு சக்திவேல் வலியுறுத்தினார்.
“செயற்கை நுண்ணறிவுக் கூறுகளைப் பொதுப்படையாகக் கற்பிப்பதால் அதிகப் பயனில்லை. மாற்றங்கள் ஓரிரு ஆண்டுகளில் உணரக்கூடிவை என்பதால் மிகவும் கவனத்துடன் பயிற்சியளிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவை முன்கூட்டியே பயன்படுத்துவோர், பிற்காலத்தில் அதிகம் திணறவேண்டியதில்லை என்பது அவரின் அறிவுரை.
“ஊழியரணியை அந்தத் தொழில்நுட்பம் அழித்துவிடாது, மறுவடிவமைக்கும். எனவே ஒவ்வொரு நாளும் அதுபற்றிக் கற்போம்,” என்று திரு சக்திவேல் கூறினார்.

