சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் (சிஜக) சார்பில் மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் திறமைமிக்கவர்கள் என்றும் அவர்கள் அடுத்த இரண்டு பொதுத் தேர்தலுக்குள் அமைச்சர்கள் ஆகக் கடிய அளவுக்கு ஆற்றல் உடையவர்கள் என்றும் சிஜகவின் தலைவர் டாக்டர் பால் தம்பையா தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (28 ஏப்ரல்) உட்லண்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் பேசிய டாக்டர் தம்பையா, சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கான காரணமே உயரும் விலைவாசி என்றார்.
“இனம் தொடர்பான விவகாரங்கள் குறித்து மக்கள் செயல் கட்சி அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறது. ஆனால் அக்கட்சிதான் ‘சீனர், மலாய்க்காரர், இந்தியர் அல்லது இதர இனத்தவர்’ எனும் பிரிவை உருவாக்கியுள்ளது.
“அதுமட்டுமல்லாது, முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரை உருவாக்கியது,” என்று டாக்டர் தம்பையா கூறினார்.
சிஜக முன்வைத்துள்ள சுகாதாரக் கொள்கை தமக்குப் புரியவில்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் கூறியதை டாக்டர் தம்பையா சுட்டினார். அதுகுறித்து அமைச்சர் ஓங்கிற்கு எளிதில் விளக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மசெக அதன் கொள்கைகளில் பலவற்றை சிஜகவிடமிருந்து எடுத்துக்கொண்டதாகச் சொன்ன டாக்டர் தம்பையா, மசெக அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாது என்றார்.
வீவக வீடுகள் சிங்கப்பூரர்களுக்கு மிகவும் முக்கியமானவை என்று சொன்ன டாக்டர் தம்பையா, வீடுகளுக்கான விலை கட்டுமானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.
அரசாங்கம் அதன் விருப்புரிமை அடிப்படையில் முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் மறுமேம்பாட்டுத் திட்டம் பற்றி ஒரு தகவலையும் வெளியிடவில்லை என்று கூறிய டாக்டர் தம்பையா, இந்தப் பொதுத் தேர்தல் முக்கியமானது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
சிஜக வெற்றி பெற்றால் அரசாங்கம் கொண்டு வரும் திட்டங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவர் என்று டாக்டர் தம்பையா உறுதி அளித்தார்.
இதன்மூலம் மசெக தனது செயல்பாடுகள் அனைத்துக்கும் பொறுப்பேற்கும் சூழல் ஏற்பட்டதே தீரும் என்றார் அவர்.