சிங்கப்பூரின் வெற்றிக்கு அரசாங்கத் திட்டங்களுடன் சிங்கப்பூரர் ஒவ்வொருவரின் முயற்சி, ஒருவருக்கொருவர் உதவும் பண்பு, இன்பதுன்பங்களைப் பகிரும் பாங்கு, ஒன்றிணைந்த செயல்பாடுகள் ஆகியவையும் முக்கியம் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
சீன மொழியில் ஆற்றிய தேசிய தினப் பேரணி உரையில் இவ்வாறு குறிப்பிட்ட பிரதமர் வோங், ‘ஒரு சிறு குடை’ (A Little Umbrella) எனும் ஹொக்கியன் மொழிப் பாடலைக் குறிப்பிட்டுப் பேசினார்.
பெருமழையில் நனைந்து, பாதை தெளிவில்லாத நிலையில் ஒரே குடையைப் பகிர்ந்து நடக்கும் இருவர் குறித்த பாடல் அது.
“புயல், மழை தொடர்ந்தாலும், உனக்கு நானும் எனக்கு நீயும் ஆதரவாக இருப்போம். இதனை ஒன்றாகக் கடப்போம்,” எனும் பொருள் கொண்ட அப்பாடலைக் குறிப்பிட்ட அவர், “நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் சிங்கப்பூருக்குப் புதிய, துடிப்பான அத்தியாயத்தை எழுத முடியும்,” என்றும் சொன்னார்.