சிங்கப்பூரில் 2024ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், சட்டவிரோத மின்சிகரெட் வர்த்தகம் மூலம் கிட்டத்தட்ட 10.4 மில்லியன் வெள்ளி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகப் புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய-ஆசியான் வர்த்தக மன்றமும் ‘யூரோமோனிட்டர் இன்டர்நேஷனல்’ என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனமும் திங்கட்கிழமை (மே 18) கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் கள்ளச் சிகரெட்டுகள், மின்சிகரெட்டுகள் உள்ளிட்ட சட்டவிரோதப் புகையிலை விற்பனை காரணமாக, அதே காலகட்டத்தில் அரசாங்கத்திற்கு ஏறக்குறைய 156 மில்லியன் வெள்ளி வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
சிங்கப்பூருடன் சேர்த்து மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, வியட்னாம், பிலிப்பீன்ஸ் ஆகிய ஆசியான் நாடுகள் ஒட்டுமொத்தமாக 16.6 பில்லியன் வெள்ளி வரி வருவாயை இழந்துள்ளதாக அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
“கள்ள வர்த்தகத்தில் ஈடுபடும் சட்டவிரோதக் கும்பல்கள் ஆண்டுக்காண்டு தங்களது லாபத்தை அதிகரித்து வருகின்றன. இந்த நிலை தொடர்ந்தால், அரசாங்கங்களின் வரி வருவாய் பாதிக்கப்படுவதோடு, நேர்மையான முறையில் செயல்படும் உரிமம் பெற்ற வர்த்தக நிறுவனங்களுக்கான தேவையையும் இது திசை திருப்பிவிடும்,” என அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
சட்டவிரோதப் பொருள்களின் குறைந்த விலையும், அவை எளிதில் கிடைக்கக்கூடிய தன்மையுமே இதற்கான தேவையை அதிகரிக்கின்றன.
அதே வேளையில், ஆசியான் வட்டாரத்தின் பரந்து விரிந்த, ஒன்றுக்கொன்று தொடர்புள்ள வர்த்தகப் பாதைகளும் சீரற்ற விநியோகத் தொடர் கட்டுப்பாடுகளுமே இதற்கான விநியோகத்தை எளிதாக்குகின்றன.
இதனால், சுங்கத்துறை அதிகாரிகள் சட்டத்தை அமலாக்குவதில் பெரும் இடையூறுகள் ஏற்படுகின்றன. கள்ளச் சிகரெட்டுகளும் மின் சிகரெட்டுகளும் பெரும்பாலும் இந்த வட்டாரத்தைச் சேர்ந்த இந்தோனீசியா, கம்போடியா, சீனா ஆகிய நாடுகளில் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் ஆகியவை விநியோகத்திற்கான முக்கிய நிலையங்களாக விளங்குவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

