சிங்கப்பூரில் சட்டவிரோத இணையச் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் ஆறு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 15) தீவின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் பிடிபட்டதாக சனிக்கிழமை (ஜனவரி 17) காவல்துறை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
பூன் லே அவென்யூ, தெங்கா டிரைவ், பாண்டான் கார்டன்ஸ், புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 8, ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 93, ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 91 ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது ஐந்து ஆடவர்களும் ஒரு பெண்ணும் சிக்கினர். அவர்கள் 32 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
கைது செய்யப்பட்ட அறுவரிடமிருந்தும் $70,000 ரொக்கப் பணம், கணினி மற்றும் கைப்பேசி போன்ற மின்னணு சாதனங்கள், சூதாட்டம் தொடர்பான பொருள்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சட்டவிரோதக் குதிரைப் பந்தயம், லாட்டரிக் குலுக்கு போன்ற நடவடிக்கைகளில் அந்த அறுவரும் ஈடுபட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் சூதாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டம் 2022ன்கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
சட்டவிரோதமாக சூதாட்டத்தை நடத்துவோருக்கு ஏழாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அதிகபட்சம் $500,000 அபராதமும் விதிக்கப்படலாம்.

