துவாஸ் சோதனைச்சாவடியில் அண்மையில் நடத்தப்பட்ட இரண்டு நாள் கூட்டு நடவடிக்கையின்போது மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஏறக்குறைய 1.4 டன் பழங்களும் காய்கறிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
சிங்கப்பூர் உணவு அமைப்பும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையமும் ஏப்ரல் 2, 3ஆம் தேதிகளில் இச்சோதனையை மேற்கொண்டதாக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) அவை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
சில்லறை விற்பனையாளர்களிடமும் வாடிக்கையாளர்களிடமும் நேரடியாக விநியோகிக்க, பழங்களையும் காய்கறிகளையும் கொண்டுவந்த கனரக வாகனங்களைக் குறிவைத்து சோதனை நடத்தப்பட்டது.
துவாஸ் சோதனைச்சாவடியில் உள்ள குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள், அப்போது இரு வாகனங்களில் இருந்த சரக்குகளில் முரண்பாடு இருந்ததைக் கவனித்தனர். கூடுதல் சோதனைக்காக அவற்றைச் சிங்கப்பூர் உணவு அமைப்பிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.
குடைமிளகாய், ஜப்பானிய வெள்ளரிக்காய், தேசிக்காய், கடுகுக் கீரை போன்ற அறிவிக்கப்படாத, குறைத்து அறிவிக்கப்பட்ட பழங்களையும் காய்கறிகளையும் அந்த வாகனங்களில் உணவு அமைப்பு கண்டுபிடித்தது.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட அனைத்துப் பழங்களும் காய்கறிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

